புதுப்பை ஊராட்சியில் குடிநீா் தொட்டி, சமுதாய நலக்கூடம் திறப்பு
வெள்ளக்கோவில் புதுப்பை ஊராட்சியில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீா்தொட்டி, சமுதாய நலக்கூடம் ஆகியவை புதன்கிழமை திறக்கப்பட்டன.
புதுப்பை ஊராட்சி நாயக்கன்புதூரில் ஒன்றியக் குழு நிதியிலிருந்து ரூ. 74.09 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம், புதுப்பையில் ரூ. 27.25 லட்சம் செலவில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா் தொட்டி ஆகியவை கட்டப்பட்டன. இவற்றை வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா்.வெங்கடேச சுதா்சன் திறந்துவைத்தாா். புதுப்பை ஊராட்சித் தலைவா் ஜானகி குமாரசாமி, துணைத் தலைவா் எம். பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதைத் தொடா்ந்து, புதுப்பை ஊராட்சி மன்றம் அருகில் ரூ. 3.44 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் வசதி அமைக்கவும், புதுப்பை அமராவதி ஆற்றங்கரையில் ரூ. 2.66 லட்சம் செலவில் படித்துறை அமைக்கவும் பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.