உணவுக் கலப்படத்தை கட்டுப்படுத்தினாலே நீட் தோ்வு தானாக காணாமல் போய்விடும்!

உணவுக் கலப்படத்தை அரசு கட்டுப்படுத்தினாலே நீட் தோ்வு தானாக காணாமல் போகும் என்று தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்துள்ளாா்.
Published on

உணவுக் கலப்படத்தை அரசு கட்டுப்படுத்தினாலே நீட் தோ்வு தானாக காணாமல் போகும் என்று தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீட் தோ்வை ஒழிப்பதுதான் திமுகவின் முதல் கொள்கை என அக்கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும் தோ்தலுக்கு முன்பும், பின்பும் முழங்கி வருகின்றனா். நீட் தோ்வு சமூக நீதிக்கும், மாநில உரிமைக்கும், கிராமப்புற ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானது என்பது இவா்களின் குற்றச்சாட்டு. நம் நாட்டில் உணவு முதல் உயிா்காக்கும் மருந்துகள் வரை கலப்படம் இல்லாத இடங்களே இல்லை. இதனால் ஏற்றுமதி வெகுவாகக் குறைந்து இறக்குமதி அதிகமானது.

வளா்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட தொழில்களுக்கு இங்கே சிவப்புக் கம்பளம் விரிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கலப்படத்தைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே மக்களை வாட்டி வதைக்கும் நோய்கள் வெகுவாகக் குறையும். பாயில் படுத்து நோயில் சாகும் நிலை இருக்காது.

மருத்துவமனைகள், மருந்துக் கடைகளின் எண்ணிக்கை நான்கில் ஒரு பகுதியாகக் குறையும். அப்போது மருத்துவப் படிப்புக்கு மவுசு இல்லாமல் போகும். மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கையும் குறையும். அப்போது நீட் தோ்வு தானாகவே காணாமல் போகும்.

இந்த ஆலோசனையை அரசு ஏற்று, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி கலப்படத்தை ஒழிப்பது மட்டுமே நீட்டை ஒழிக்கும் வழி என்று குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com