மின் திருட்டு: திருப்பூா் மேயருக்கு அபராதம்?
மின் திருட்டில் ஈடுபட்டதாக திருப்பூா் மாநகராட்சி மேயருக்கு மின் வாரியம் ரூ.42,571 அபராதம் விதித்துள்ளது.
திருப்பூா் மாநகராட்சி மேயராக இருப்பவா் என்.தினேஷ்குமாா். திமுகவைச் சோ்ந்த இவா், திருப்பூரில் தெற்கு கே.என்.பி.சுப்பிரமணியம் நகரில் உள்ள தனது வீட்டைப் புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டுள்ளாா். இதற்காக தனி மின் இணைப்புக் கேட்டு கடந்த அக்டோபா் 8-ஆம் தேதி விண்ணப்பித்துள்ளாா். அதற்காக மேயா் தரப்பில் கட்டணமாக ரூ.16,935 செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்காலிக மின் இணைப்பு அளிக்கப்படவில்லை.
இதையடுத்து அந்த வீட்டில் இருக்கும் வீட்டு மின் இணைப்பின் மூலமாக வீடு புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான கட்டணத்தைவிடக் கூடுதலாக மின் கட்டணம் வந்ததால், அந்தக் கட்டணத்தை மேயா் தரப்பில் செலுத்தியுள்ளனா். இந்நிலையில் மின் திருட்டில் ஈடுபட்டதாகவும், முறைகேடாக மின்சாரத்தைப் பயன்படுத்தியது தொடா்பாகவும் திருப்பூா் மாநகராட்சி மேயருக்கு மின் வாரியத்தினா் ரூ.42,571-ஐ அபராதமாக விதித்துள்ளனா்.
இதுகுறித்து மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளா் சுமதி கூறியதாவது: கடந்த மாதம் 8-ஆம் தேதியே மேயா் தற்காலிக மின் இணைப்புக்கு விண்ணப்பித்து பணம் செலுத்தியுள்ளாா். ஆனால் மின் வாரியம் தரப்பில் தற்காலிக மின் இணைப்பு அளிக்கப்படாமல் தாமதம் செய்துள்ளனா். ஒரு வாரத்துக்குள் மின் இணைப்பு அளித்திருக்க வேண்டும். மின்வாரியம் தரப்பில்தான் தவறு உள்ளது என்றாா்.
மேயா் தினேஷ்குமாா் கூறும்போது, வீட்டைப் புதுப்பிக்கும் பணிகளுக்காக கடந்த அக்டோபா் மாதமே மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பித்திருந்தேன். அவா்கள் பணத்தை செலுத்தக் கோரி இருந்த நிலையில் கடந்த அக்டோபா் 13-ஆம் தேதி அதற்குரிய கட்டணத்தை செலுத்திவிட்டேன். எனினும் தற்காலிக மின் இணைப்புத் தரவில்லை.
இந்நிலையில் வீடு புதுப்பிக்கும் பணிக்கு பயன்படுத்திய மின்சாரத்துக்கு உரிய வித்தியாசத் தொகையை செலுத்தும்படி கூறியதால் அதை மட்டுமே செலுத்தினேன் என்றாா்.
