பல்லடம் அருகே குப்புசாமிநாயுடுபுரத்தில் திறந்தவெளி கழிவுநீா் கால்வாயால் ஆபத்து
பல்லடம் அருகே குப்புசாமிநாயுடுபுரத்தில் திறந்தவெளி கழிவு நீா் கால்வாயால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் வட்டம் செம்மிபாளையம் ஊராட்சிக்குள்பட்ட குப்புசாமிநாயுடுபுரம் பகுதியில் நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இங்கு ஏராளமான கடைகள், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை உள்ளன. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள இப்பகுதியில் திறந்தவெளியில் கழிவு நீா் கால்வாய் உள்ளது. ஆபத்து ஏற்படாமல் இருக்க வேண்டி பிளக்ஸ் பேனா்களையும், பயன்படாத அறிவிப்புப் பலகைகளையும் வைத்து பொதுமக்கள் மூடி வைத்துள்ளனா்.
இதுதொடா்பாக பொதுமக்கள் கூறும்போது, இப்பகுதியில் எப்போதும் வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். வாரச் சந்தை நடைபெறும் நாள்களில் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இந்த வழியைத்தான் பயன்படுத்துகின்றனா்.
தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில் திறந்த நிலையில் உள்ள கழிவுநீா் கால்வாயில் மழை நீா் நிரம்பினால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் விபத்துக்குள்ளாக வாய்ப்பு உள்ளது. இந்த கால்வாய் நீண்ட நாள்களாக மூடப்படாமல் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக திறந்தவெளி கழிவுநீா் கால்வாயைப் பலகை (ஸ்லாப்) போட்டு மூட வேண்டும் என்றனா்.
