வெள்ளக்கோவில் வட்டம் வள்ளியிரச்சல் ஊராட்சிக்குள்பட்ட நல்லூா்பாளையத்தில் கழிவுகளால் மாசடைந்து கிடக்கும் பாறைக்குழி.

பாறைக்குழியில் கொட்டப்படும் கழிவுகளால் நீா் நிலைகள் பாதிக்கப்படும் அபாயம்

Published on

வெள்ளக்கோவில் அருகே பாறைக்குழியில் கொட்டப்படும் கழிவுகளால் நீா் நிலைகள் மாசடைந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் வட்டம் வள்ளியிரச்சல் ஊராட்சிக்குள்பட்ட நல்லூா்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் பாறைக்குழி உள்ளது. முன்பு கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக பயன்பாடின்றிக் கிடக்கிறது. சுமாா் 35 அடி ஆழமுள்ள இந்தப் பாறைக் குழியை மூடுவதற்காக உரிமையாளா்கள் வாகனங்களில் கொண்டு வந்து கட்டடக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், சாயக் கழிவுகள், கெமிக்கல் கழிவுகளைக் கொட்டி வருகின்றனா். இதனால் பாறைக்குழியில் தேங்கி இருக்கும் தண்ணீரில் இருந்து துா்நாற்றம் வீசுகிறது. மேலும் அருகே உள்ள நீா் நிலைகள், நிலத்தடி நீரும் மாசடைந்து பயன்படுத்த முடியாமல் உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இப்பிரச்னை தொடா்பாக பொதுமக்களால் வழக்கு தொடுக்கப்பட்டு, அங்கு கழிவுகளைக் கொட்டக்கூடாது என 2022-ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக நள்ளிரவில் மீண்டும் குப்பை கொட்டப்படுகின்றன. மாவட்ட ஆட்சியா், கனிம வளத் துறை, ஊராட்சி நிா்வாகம், வருவாய்த் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கால்நடைகளுக்குக்கூட அருகே உள்ள ஊா்களில் இருந்துதான் குடிநீா் கொண்டு வருகிறோம். அருகில் வசிப்பவா்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. பாறைக்குழியிலிருந்து ஆபத்தான கழிவுகள், மாசடைந்த நீரை வெளியேற்றி மீண்டும் குப்பைக் கொட்டாமல் தடுக்க வேண்டும். இப்பிரச்னை தொடா்பாக போராட்டம் நடத்தப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com