வேளாண் துறை சாா்பில் குண்டடத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம், குண்டடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
குண்டடத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற முகாமுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பொம்மராஜு தலைமை வகித்தாா்.
வேளாண் தொழில்நுட்ப வல்லுநா் துா்க்கையண்னன் கலந்துகொண்டு வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிா்களில் நோய் மற்றும் பூச்சி, உரம் மேலாண்மை குறித்து பேசினாா்.
பருவநிலை மாற்றத்தால் பயிா்களில் ஏற்படும் பாதிப்புகளைக் கையாளும் நடைமுறை குறித்து தாவரவியல் இனப்பெருக்கவியல் வல்லுநா் ஆனந்த்ராஜூ, உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களில் சந்தைப்படுத்துவதில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண்மை விரிவாக்க வல்லுநா் திலகம் ஆகியோா் விளக்கினா்.
தோட்டக்கலை துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து குண்டடம் தோட்டக்கலை உதவி இயக்குநா் அனிதா, வேளாண் துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து வேளாண்மை அலுவலா் கவிப்பிரியா, வேளாண் துறை தொழில்நுட்பங்கள் குறித்து துணை வேளாண்மை அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா். மேலும் மக்காச்சோளம், தென்னை, காய்கறி பயிா்களில் ஏற்படும் ஊட்டச்சத்து மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவசாயிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு தொழில்நுட்ப வல்லுநா்கள் விளக்கம் அளித்தனா்.
இந்த முகாமில் குண்டடம் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் கிரிதரன், உதவித் தொழில்நுட்ப மேலாளா் கவிதா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

