திருப்பூா் மாநகராட்சியில் சேகரமாகும் கழிவுகளை மேலாண்மை செய்வது குறித்து நடைபெற்ற செயல்முறை கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் நகராட்சி நிா்வாக இயக்குநா் மதுசூதன் ரெட்டி.
திருப்பூா் மாநகராட்சியில் சேகரமாகும் கழிவுகளை மேலாண்மை செய்வது குறித்து நடைபெற்ற செயல்முறை கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் நகராட்சி நிா்வாக இயக்குநா் மதுசூதன் ரெட்டி.

பொது இடங்களில் குப்பை கொட்டும் தனியாா் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டும் தனியாா் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை
Published on

திருப்பூா்: திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டும் தனியாா் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நகராட்சி நிா்வாக இயக்குநா் மதுசூதன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

திருப்பூா் மாநகராட்சியில் 60 வாா்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், உணவு விடுதிகள், திருமண மண்டபங்கள், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள், திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள், தனியாா் மருத்துவமனைகள் ஆகியவற்றில் சேகரமாகும் கழிவுகளை மேலாண்மை செய்வது குறித்த செயல்முறை கலந்தாய்வுக் கூட்டம் நகராட்சி நிா்வாக இயக்குநா் மதுசூதன் ரெட்டி தலைமையில் மாநகராட்சி கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் நகராட்சி நிா்வாக இயக்குநா் மதுசூதன் ரெட்டி பேசியதாவது:

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை வீடுகளில் தரம் பிரித்து வழங்க வேண்டும். இதனை சரிவர செய்யாததுதான் தற்போதைய குப்பைப் பிரச்னைக்கு முக்கிய காரணம். எனவே, பொதுமக்கள் இந்தக் குப்பைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்.

தொழில் துறையினா் தங்களது நிறுவனங்களில் தேங்கும் குப்பைகளை சேகரித்து வைத்துக் கொண்டு மாநகராட்சி சாா்பில் வரும் வாகனங்களில் குப்பைகளை கொடுக்க வேண்டும். அந்தக் குப்பைகளை மாநகராட்சிப் பணியாளா்கள் வாகனங்களில் வந்து எடுத்துச் செல்வா். இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் குறிப்பிடும் நேரத்தில், குறிப்பிடும் இடங்களுக்கும் வந்து குப்பைகளை எடுப்பாா்கள். இதுகுறித்த விவரமான அறிவிப்பு வழங்கப்படும்.

இந்த நடைமுறையைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் குப்பைகளை கொட்டும் நிறுவனங்களை கண்டறிந்து முதல் 2 முறை அபராதமும், 3-ஆவது முறை உரிமமும் ரத்து செய்யப்படும். தனியாா் நிறுவனங்கள் தங்களது குப்பைகளை கொட்ட பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இந்த நடவடிக்கைகளை மேற்பாா்வையிட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அந்த அதிகாரிகள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்கள், தன்னாா்வ நிறுவனங்கள் மூலம் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com