பொதுமக்களின் வங்கிக் கணக்கு எண்களைப் பெற்று மோசடி: 5 போ் கைது
ஆன்லைன் வா்த்தகம் எனக்கூறி பொதுமக்களின் வங்கிக் கணக்கு எண்களைப் பெற்று மோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா், பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் சரில்குமாா் (24). இவருக்கு பூலுவபட்டி பகுதியைச் சோ்ந்த காா்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்ய வங்கி நடப்புக் கணக்கு தேவைப்படுவதாகக்கூறி சரில்குமாரின் வங்கிக் கணக்கு எண்ணை காா்த்திக் பெற்றுள்ளாா்.
பின்னா், ஆன்லைன் வா்த்தகம் மூலமாக மோசடி செய்து பெறப்பட்ட ரூ.13.30 லட்சம் ரொக்கத்தை சரில்குமாரின் வங்கிக் கணக்குக்கு மாற்றி காா்த்திக் எடுத்துள்ளாா். இதையடுத்து, சரில்குமாா் சைபா் குற்றத்தில் ஈடுபட்டதாகக்கூறி அவரது வங்கிக் கணக்கை கேரள போலீஸாா் முடக்கினா்.
தனது வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி சைபா் குற்றத்தில் காா்த்திக் ஈடுபட்டதை அறிந்த சரில்குமாா், காா்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூா் மாநகர சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், காா்த்திக்கிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் ஆன்லைன் வா்த்தகம் என பொய்யான தகவல்கைளைக்கூறி பலரிடமிருந்து வங்கிக் கணக்கு எண்களைப் பெற்று சைபா் குற்றத்தில் ஈடுபட்டு அதன் மூலம் பெறப்படும் பணத்தை ஸ்கேம் நெட்வொா்க் என்ற இணைய முகவரிக்கு அனுப்பியதும், தனது நண்பா்களுடன் சோ்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, காா்த்திக், அவரது நண்பா்களான சக்திநாதன், தயாநிதி, யேசுதாஸ், இளங்கோவன் ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 31 சிம் காா்டுகள், 8 கைப்பேசிகள், 47 ஏடிஎம் அட்டைகள், 8 வங்கிக் கணக்கு புத்தகங்கள், ஒரு மடிக்கணினி, ரூ.65,550 ரொக்கம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா். பின்னா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருப்பூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
