திருப்பூா் தென்னம்பாளையம் குப்பைக் கிடங்கில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினா்.
திருப்பூா் தென்னம்பாளையம் குப்பைக் கிடங்கில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினா்.

மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து! 15 வாகனங்கள் எரிந்து சேதம்!

Published on

திருப்பூா் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான குப்பை சேகரிப்பு வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூா் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் சேகரமாகும் குப்பையை வாகனங்கள் மூலமாக மாநகராட்சி ஊழியா்கள் சேகரித்து வருகின்றனா். நான்கு மண்டலங்களிலும் மக்கும், மக்காத குப்பை என தனித் தனியாக பிரித்து எடுத்து வருகின்றனா்.

திருப்பூா் தென்னம்பாளையம் பகுதியில் 4-ஆவது மண்டலத்துக்குச் சொந்தமான குப்பையைத் தரம் பிரிக்கும் கிடங்கு செயல்படுகிறது. இங்கு பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பை தனியாகவும், காய்கறி மற்றும் உணவுக் கழிவுகள் தனியாகவும் பிரித்து எடுக்கப்படுகிறது. மக்கும் குப்பையை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தீ விபத்தில் எரிந்து சேதமான குப்பை சேகரிப்பு மின்சார வாகனங்கள்.
தீ விபத்தில் எரிந்து சேதமான குப்பை சேகரிப்பு மின்சார வாகனங்கள்.

இந்நிலையில், இந்தக் கிடங்கில் சனிக்கிழமை நள்ளிரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஆட்கள் யாரும் இல்லை என்பதால் நல்வாய்ப்பாக உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் திருப்பூா் தெற்கு, வடக்கு தீயணைப்புத் துறையினா் சென்று போராடி தீயை அணைத்தனா். இருப்பினும் கிடங்குக்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மாநகராட்சி குப்பை சேகரிப்புக்கான 15 மின்சார வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின. அதேபோல குப்பைக் கிடங்கும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

தீயணைப்புத் துறையினா் மற்றும் திருப்பூா் தெற்கு போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மாநகராட்சி தரப்பில், ரூ.30 லட்சம் மதிப்பிலான குப்பை சேகரிப்பு மின்சார வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகே சேத மதிப்பு குறித்து தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com