தகராறில் தொழிலாளி உயிரிழப்பு: டெய்லருக்கு 5 ஆண்டுகள் சிறை
தகராறில் கீழே தள்ளிவிட்டதில் காயமடைந்து தொழிலாளி உயிரிழந்த வழக்கில், அவருடன் பணியாற்றிய வந்த டெய்லருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (57). இவா் பல்லடம் கரடிவாவியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தாா். இவருடன் திருவாரூா் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சோ்ந்த ராஜ்கண்ணு (39) என்பவரும் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், கரடிவாவி பகுதியில் இருவருக்கும் இடையே கடந்த 2020 ஜூன் 20-ஆம் தேதி இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த முருகன், ராஜ்கண்ணுவை பிடித்து தள்ளிவிட்டாா். இதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து ராஜ்கண்ணு இறந்தாா். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து முருகனைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
திருப்பூா் 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி ஸ்ரீதா் அளித்த தீா்ப்பில் முருகனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் பூமதி ஆஜரானாா்.
