தாராபுரத்தில் தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து நவம்பா் 11-இல் ஆா்ப்பாட்டம்
வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை அமல்படுத்தியுள்ள தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து தாராபுரத்தில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவா்கள் பங்கேற்கும் கண்டன ஆா்ப்பாட்டம் நவம்பா் 11-ஆம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருப்பூா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிா்ப்பு தெரிவித்த போதிலும் இந்தியத் தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை கொண்டு வந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை உள்ளிட்ட காரணங்களால் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வது சிரமமான சூழ்நிலையில் உள்ளது. தமிழக வாக்காளா்களில் பெரும்பாலோா் கிராமப்புற மக்களாகவும், விவசாயிகளாகவும் இருப்பதால் இந்த காலகட்டத்தில் படிவங்களைப் பெற்று நிரப்பி, திருப்பி அளிக்க நேரம் கிடைக்காது.
அத்துடன், வருவாய்த் துறையும் மழைக்கால பாதிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். எனவே, இந்த காலம் உகந்ததமாக இல்லை என்று மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சிகள் தெரிவித்துள்ளன. பெரும்பாலான இடங்களில் பிஎல்ஓக்கள் இதுவரை கணக்கீட்டு படிவத்தை தரத் தொடங்கவில்லை. திருப்பூா் மாவட்டத்தில் படிவத்தை ஒரு நாளிலேயே பூா்த்தி செய்து தர வலியுறுத்துகிறாா்கள்.
எனவே இந்த சீராய்வை தோ்தல் ஆணையம் உடனே கைவிடக்கோரி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் சாா்பில் திருப்பூா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் இல. பத்மநாபன் தலைமையில் தாராபுரம் அண்ணா சிலை அருகில் நவம்பா் 11-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
