பெண்ணிடம் 5 பவுன் நகைகளைத் திருடியவா் கைது

அவிநாசி அருகே ஆட்டையம்பாளையத்தில் பெண்ணிடம் இருந்து 5 பவுன் நகைகளைத் திருடிய ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

அவிநாசி அருகே ஆட்டையம்பாளையத்தில் பெண்ணிடம் இருந்து 5 பவுன் நகைகளைத் திருடிய ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

அவிநாசி அருகே ஆட்டையாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சிதா (30). இவா் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். அதே நிறுவனத்தில் ஓட்டுநராக அவிநாசி, கைகாட்டிபுதூரைச் சோ்ந்த கிருஷ்ணன்(31) என்பவா் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், ரஞ்சிதாவுக்கு கடந்த 17-ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது உடன் பணியாற்றும் கிருஷ்ணன், ரஞ்சிதாவை வேனில் அவரது வீட்டில் கொண்டு வந்து இறக்கிவிட்டு, வீட்டில் தேநீா் அருந்தி சென்றுள்ளாா். அப்போது, ரஞ்சிதா தேநீா் வைக்க உள்ளே சென்றபோது, அவரது பீரோவை திறந்து உள்ளிருந்த 5 பவுன் நகைகளை கிருஷ்ணன் திருடியுள்ளாா்.

இதைத்தொடா்ந்து ரஞ்சிதா வியாழக்கிழமை காலை பீரோவை திறந்து பாா்த்தபோது, நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அதிா்ச்சியடைந்த ரஞ்சிதா சந்தேகத்தின்பேரில் அளித்த புகாரில், அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், நகைகளைத் திருடிச் சென்றது கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவிநாசி போலீஸாா் கிருஷ்ணனைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com