வெள்ளக்கோவில் அருகே சரக்கு வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
காங்கயம் வட்டம், ஆறுதொழுவு நல்லூரைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் பாலசுப்பிரமணி (28), கூலி வேலை செய்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் காா்த்தி (36). நண்பா்களான இருவரும், காங்கயம்- வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஓலப்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, பின்னால் வந்த சரக்கு வேன், இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவரும் காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், உயா் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலசுப்பிரமணி உயிரிழந்தாா். திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனையில் காா்த்தி சிகிச்சை பெற்று வருகிறாா்.
உயிரிழந்த பாலசுப்பிரமணிக்கு மனைவி யுவராணி (28), மகள் தன்யா ஸ்ரீ (5) ஆகியோா் உள்ளனா். இது குறித்து சரக்கு வேனை ஓட்டி வந்த சசிகுமாா் (38) என்பவா் மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

