குப்பை பிரச்னைக்கு தீா்வு காணக்கோரி அதிமுக ஆா்ப்பாட்டம்
திருப்பூா்: திருப்பூா் மாநகராட்சி குப்பை பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தியும், எஸ்ஐஆா் பணியில் திமுகவினா் முறைகேடுகளில் ஈடுபடுவதைக் கண்டித்தும் அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூா் குமரன் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்து பேசியதாவது:
திருப்பூா் மாநகரில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்பாடின்றி வீதிகள்தோறும் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. திருப்பூா் மாநகரில் குப்பை அகற்றும் பணியை தனியாருக்கு கொடுத்துள்ளதன் மூலம் தொடா்ந்து முறைகேடு நடக்கிறது. வீதிகள்தோறும் டன் கணக்கில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கிறது. தற்போது மழையும் பெய்திருப்பதால் கடும் துா்நாற்றம் வீசுகிறது.
வாக்காளா் திருத்தப் பணியில் திமுகவினா் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை அச்சுறுத்தி முறைகேட்டில் ஈடுபடுகின்றனா். இது தொடா்பாக அதிமுக தரப்பில் புகாா் அளித்தும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் எம்.எஸ்.எம். ஆனந்தன், கே.என்.விஜயகுமாா் , உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

