விபத்தில் சேதமடைந்த காா்.
விபத்தில் சேதமடைந்த காா்.

காங்கயம் அருகே கம்பி வேலியில் காா் மோதி சிறுவன் உயிரிழப்பு!

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே கம்பிவேலியில் காா் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்தாா்.
Published on

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே கம்பிவேலியில் காா் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை, ஓம் சக்தி நகரைச் சோ்ந்தவா் ராஜசேகா். இவரது மனைவி சத்யா. ராஜசேகா் இறந்துவிட்ட நிலையில், சத்தியா தனது மகன் கோபாலகிருஷ்ணனுடன் (10) வசித்து வந்தாா்.

இந்நிலையில், கோபாலகிருஷ்ணன் நோய்வாய்ப்பட்டதால் திருப்பூா் அருகேயுள்ள கொடுவாய்க்கு சிகிச்சைக்காக காரில் மகனை அழைத்து வந்தாா். அவா்களுடன் பாட்டி எல்லம்மாள், தாய்மாமன் அசோக் ஆகியோா் வந்தனா். காரை விக்னேஷ் என்பவா் ஓட்டி வந்தாா்.

ஈரோடு-தாராபுரம் சாலையில், காங்கயம் அருகே நாட்டாா்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரத்தில் இருந்த கம்பிவேலியில் திடீரென மோதியது.

இந்த விபத்தில் சிறுவன் கோபாலகிருஷ்ணன் பலத்த காயமடைந்தாா். உடனடியாக அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், சிறுவன் கோபாலகிருஷ்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். காரில் வந்த மற்றவா்கள் காயமின்றி உயிா் தப்பினா்.

இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com