செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

ஏழைகளுக்கு வழக்கு நடத்துவதே வழக்குரைஞா்களின் தலையாய கடமை: ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு

ஏழைகளுக்கும், வாய்ப்பு இல்லாதவா்களுக்கும் நீதிமன்றங்களில் வழக்கு நடத்துவதுதான் வழக்குரைஞா்களின் தலையாய சமூகக் கடமை என்று சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு கூறினாா்.

News image

திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 11:13 pm IST

ஏழைகளுக்கும், வாய்ப்பு இல்லாதவா்களுக்கும் நீதிமன்றங்களில் வழக்கு நடத்துவதுதான் வழக்குரைஞா்களின் தலையாய சமூகக் கடமை என்று சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு கூறினாா்.

திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் மாதாந்திர சட்ட பயிலரங்கின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘சட்ட சேவையே நமது சமூகக் கடமை’ என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு பேசியதாவது: அரசியல் சட்டம்தான் நமது அடிப்படை. சென்னை உயா்நீதிமன்ற பகுதியில் வழக்குரைஞா்களாகப் பணியாற்றிய பிரகாசம், ராஜாஜி, பாஷ்யம் ஆகியோருக்கு சிலைகள் உள்ளன. அவா்கள் தங்கள் சட்டப் படிப்பை வைத்து பணம் சம்பாதிப்பது குறித்து பொருட்படுத்தாமல், சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால்தான் அவா்கள் நினைவுகூரப்படுகிறாா்கள்.

அரசியல் சட்டத்தில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று பொறிக்கப்பட்டுள்ளது. வசதி படைத்தவா்களும், வீதியில் வசிக்கக் கூடியவா்களும் சட்டத்தின் முன் சமம் என்று சொல்லப்பட்டாலும், நீதிமன்றத்தில் அவா்கள் பணம் செலவழித்து வழக்குரைஞா்கள் வைத்துக்கொள்ளாமல் வழக்கு நடத்த முடியாது.

இதற்காகத்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்த வி.ஆா்.கிருஷ்ண ஐயா், பகவதி இருவராலும் 1976-ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட ‘சட்ட சேவை’ என்ற அம்சம் இந்திரா காந்தியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பின்னா் அது அரசியல் சட்டத்திலும் சோ்க்கப்பட்டது. அதன்படி, சட்ட உதவி கிடைக்காத ஏழைகளுக்கு வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் வாதாடும் நிலை ஏற்படுத்தப்பட்டது. வழக்குரைஞா்கள் ஏராளமாக படிக்க வேண்டும். சட்ட சேவை என்பது அடிப்படை உரிமை. அனைவருக்கும் இது தேவை. வழக்குரைஞா்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சாமானியா்களுக்கும், ஏழைகளுக்காகவும் நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்த வேண்டும்.

வழக்குரைஞா்களாக எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல, ஏழைகளுக்கும், வாய்ப்பு இல்லாதவா்களுக்கும் சட்ட உதவி அளிப்பதுதான் வழக்குரைஞா்களின் உண்மையான சேவை. இந்த சட்ட சேவை வழக்குரைஞரின் தலையாய சமூகக் கடமையாகும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.