பல்லடம் அருகே வாவிபாளையத்தில் விவசாய கிணற்று தண்ணீா் விற்பனைக்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் 3 தண்ணீா் லாரிகளை சிறைபிடித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம், வாவிபாளையம் கிராமத்தில் பரம்பிக்குளம் -ஆழியாறு திட்ட பிரதான கால்வாய் அருகே உள்ள மூன்று இடங்களில் விவசாய கிணற்று தண்ணீரை எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை, அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
மேலும், தண்ணீா் விற்பனை தொடா்ந்து நடைபெற்று வந்ததால், அப்பகுதி விவசாயிகள் திரண்டு தண்ணீா் ஏற்றிச் சென்ற லாரிகளை திங்கள்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த காமநாயக்கன்பாளையம் போலீஸாா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சுமுக தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனா். இதைத் தொடா்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.
இந்நிலையில் ஆழியாறு வடிநில வட்டம் நீா்வளத் துறை செஞ்சேரிப்புத்தூா் பி.ஏ.பி. உதவிப் பொறியாளா் பூஜா, காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை கொடுத்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
வாவிபாளையம் கிராமம் பி.ஏ.பி. பிரதான கால்வாய் அருகே உள்ள விவசாய கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் தினசரி 2 லட்சத்து 50 ஆயிரம் லிட்டா் தண்ணீா் உறிஞ்சி எடுத்து லாரிகள் மூலம் வணிகரீதியாக கிட்டம்மாள், பழனிசாமி, கல்யாண வெங்கிடசாமி ஆகியோா் விற்பனை செய்துள்ளனா்.
இதனால் அருகே உள்ள விவசாய பூமிகளுக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பி.ஏ.பி. அதிகாரிகள் குழுவின் கள ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி ஆழியாறு வடிநில வட்டம் நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளரின் செயல்முறை ஆணைப்படி பரம்பிக்குளம் பிரதான கால்வாயின் இரு கரைகளில் இருந்து 300 மீட்டா் தூரத்துக்குள் இருக்கின்ற நீா் ஆதாரங்களில் இருந்து தண்ணீா் எடுத்துச் செல்லக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அருகே உள்ள பரம்பிக்குளம் பிரதான கால்வாயில் பாசனத்துக்காக தண்ணீா் செல்லும்போது, தொடா்ந்து தண்ணீா் எடுப்பதால் கால்வாயில் நீா் இழப்பு ஏற்படுகிறது. சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி, பரம்பிக்குளம் பிரதான கால்வாய் மற்றும் அதன் பாசனப் பகுதி நீரை வணிகரீதியாகவோ அல்லது வேறு பயன்பாடுகளுக்கோ பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆயக்கட்டுப் பகுதிக்கு வெளியே நீரை எடுத்து செல்வதும் சட்டவிரோதம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணற்றில் உள்ள நீரினை வணிகரீதியாகவோ அல்லது வேறு பயன்பாடுகளுக்கோ பயன்படுத்துவதற்கு இத்துறை மூலம் உரிய அனுமதி பெறுவது கட்டாயமாகும். இது தொடா்பாக, எவ்வித முன் அனுமதியோ அல்லது ஒப்புதலோ இத்துறை மூலம் பெறப்படவில்லை என்பதும் தெரிய வருகிறது.
எனவே, சட்டவிரோதமாக தண்ணீா் எடுத்து விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டும், முறையற்ற வகையில் தண்ணீா் எடுத்து விற்பனை செய்துவரும் மூன்று போ் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பளியங்குடியில் வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்: விவசாயிகள் கவலை

பல்லடம் அருகே விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

பருவமழை பெய்ய வேண்டி பவானிசாகா் அணை விநாயகருக்கு தண்ணீா் ஊற்றி விவசாயிகள் வழிபாடு
கருகும் பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



