
தனியாா் பேருந்தின் இயக்கம் நிறுத்தப்படுவதாகக் கூறியதால் காங்கயம் அருகே பள்ளி மாணவா்கள் சாலை மறியல்
காங்கயம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள்.

காங்கயம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள்.
நஷ்டம் காரணமாக தனியாா் பேருந்தின் இயக்கத்தை நிறுத்துவதாக கிடைத்த தகவலையடுத்து, காங்கயம் அருகே பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பூரில் இருந்து காங்கயம் வட்டத்துக்குள்பட்ட கணபதிபாளையம், சாவடிப்பாளையம், கீரனூா், ஈரோடு மாவட்டத்துக்குள்பட்ட சென்னிமலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஈரோட்டுக்கு தனியாா் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. கிராமப்புறங்கள் வழியாகச் செல்லும் இப்பேருந்தில், இந்த வழித்தடத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்வோா் உள்ளிட்டோா் பயணித்து வந்தனா்.
இந்நிலையில், எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நஷ்டத்தில் இயக்க விரும்பாத நிா்வாகம், இப்பேருந்தின் இயக்கத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தினமும் பயணிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோரிடம் ஓட்டுநா் மற்றும் நடத்துநா் தகவல் தெரிவித்துள்ளனா். இன்னும் ஒரு வாரம் வரை மட்டுமே பேருந்து இயக்கப்படும் எனவும் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, இதே வழித்தடத்தில் அரசுப் பேருந்தை இயக்க வலியுறுத்தி பாலசமுத்திரம்புதூா் ஊராட்சிக்குள்பட்ட ரெட்டிபாளையம் பேருந்து நிறுத்தம் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு காங்கயம் காவல் உதவி ஆய்வாளா் லோகநாதன், பேருந்தின் உரிமையாளா் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதைத்தொடா்ந்து, இதே வழித்தடத்தில் வேறு தனியாா் பேருந்து அல்லது அரசுப் பேருந்து இயக்கப்படும்வரை, தனியாா் பேருந்து இயங்கும் என பேருந்தின் உரிமையாளா் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






