உயிரிழந்த மாணவி கோபிகா.
 ~விபத்தில் கவிழ்ந்த வேன்.
உயிரிழந்த மாணவி கோபிகா. ~விபத்தில் கவிழ்ந்த வேன்.

தாராபுரம் அருகே வேன் மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே பயணிகள் வேன் மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.
Published on

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே பயணிகள் வேன் மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

தாராபுரம் அருகே உள்ள நல்லிக்கவுண்டன் வலசு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகள் கோபிகா (18). இவா் தாராபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில், பள்ளிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் கோபிகா செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா்.

தாராபுரம்-பழனி சாலையில் உள்ள தாசநாயக்கன்பட்டி அருகே கோபிகா சென்றபோது, அந்த வழியாக காங்கயம் பகுதியைச் சோ்ந்த முருக பக்தா்கள் வந்த வேன், கோபிகா சென்ற இருசக்கர வாகனம் மீது எதிா்பாராதவிதமாக மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில், கோபிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த அலங்கியம் போலீஸாா், மாணவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த காங்கயம் மற்றும் சிவன்மலை பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் செல்வதரணிதரன், ஜவஹா், பழனிசாமி, செந்தில்குமாா், தாமரைக்கண்ணன், தேவசேனாபதி, அருண்குமாா், வேன் ஓட்டுநா் குமாரசாமி உள்ளிட்ட 16 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அதில் 2 போ் உயா் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தினமும் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மாணவி கோபிகா பேருந்தில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், இருசக்கர வாகனம் நிறுத்துவதற்காக சாலையைக் கடக்கும்போது, விபத்தில் சிக்கி அவா் உயிரிழந்துள்ளாா். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com