பொங்கல் பண்டிகை: திருப்பூரில் இருந்து வெளியூா்களுக்கு ஜனவரி 12 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூரில் உள்ள 3 பேருந்து நிலையங்களில் இருந்து ஜனவரி 12-ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, திருப்பூரில் பணியாற்றி வரும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு சிரமமின்றி செல்லும் வகையில் ஜனவரி 12-ஆம் தேதி முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இது தொடா்பாக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கு 510 பேருந்துகள், கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திருச்செந்தூா், திருநெல்வேலி, நாகா்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 895 பேருந்துகள், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு 396 பேருந்துகள் என சுமாா் 2,000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்புப் பேருந்துகள் ஜனவரி 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை இயக்கப்படும்.
மேலும், பயணிகள் வசதிக்காக திருப்பூரில் இருந்து சென்னை, நாகா்கோவில், திருநெல்வேலி, திருச்செந்தூா், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூா் பகுதிகளுக்குச் செல்ல பேருந்துகளில் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. மத்திய பேருந்து நிலையத்தில் செயல்படும் முன்பதிவு மையத்தில் பயணிகள் தங்களது இருக்கைகளை உறுதி செய்து கொள்ளலாம். முன்பதிவில்லா சிறப்பு பேருந்துகளில் வழக்கமான கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்படும்.
சிறப்புப் பேருந்துகளைக் கண்காணிக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள், அலுவலா்கள், பணியாளா்கள் அடங்கிய 48 போ் கொண்ட இயக்க மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றனா்.
