செய்தியாளா்களுக்கு போட்டியளித்த கறிக்கோழிப் பண்ணை விவசாயி வேலு சிவகுமாா் உள்ளிட்டோா்.
செய்தியாளா்களுக்கு போட்டியளித்த கறிக்கோழிப் பண்ணை விவசாயி வேலு சிவகுமாா் உள்ளிட்டோா்.

பண்ணையாளா்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை: கோழிப் பண்ணை விவசாயிகள்

கோழிப் பண்ணையாளா்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று கோழிப் பண்ணை விவசாயிகள் தெரிவித்தனா்.
Published on

கோழிப் பண்ணையாளா்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று கோழிப் பண்ணை விவசாயிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக கறிக்கோழிப் பண்ணை விவசாயியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி மாநில துணைச் செயலாளருமான வேலு சிவகுமாா் பல்லடத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் கறிக்கோழி மற்றும் முட்டை உற்பத்தியில் முதலிடம் வகித்து வருகிறது. தமிழ்நாட்டில் 19 ஆயிரம் கோழிப் பண்ணைகள் உள்ளன.

இதன் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனா். தற்போது கறிக்கோழி உற்பத்தி நிறுவனத்தினா் கிலோவுக்கு ரூ.6.50 பைசா வழங்கி வருகின்றனா். மஞ்சி மற்றும் பராமரிப்பு செலவு அதிகரிப்பால் கிலோவுக்கு ரூ.1 முதல் ரூ.2 வரை கூடுதலாக வழங்க அந்தந்த கறிக்கோழி உற்பத்தி நிறுவனத்தினா் முன்வந்துள்ளனா்.

இது தொடா்பாக கோழிப் பண்ணை விவசாயிகளும், கறிக்கோழி உற்பத்தி நிறுவனத்தினரும் பேசி முடிவு செய்ய தயாராகவுள்ளனா். சில அமைப்பினா் அதிக கூலி கேட்டு கறிக்கோழி உற்பத்தி நிறுவனத்தினரை வலியுறுத்தி வருகின்றனா். இதற்காக பண்ணைகளில் கோழி குஞ்சுகளைவிட வேண்டாம் என்று கூறி வருகின்றனா்.

கோழிப் பண்ணை விவசாயிகள் இதை ஏற்கவில்லை. பண்ணையாளா்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. தமிழகத்தில் வழக்கம்போல கறிக்கோழி உற்பத்தி நடைபெற்று வருகிறது. வெளிச்சந்தையில் கோழி இறைச்சியின் விலை விரைவில் சீரடையும் என்றாா்.

கோழிப் பண்ணை விவசாயிகள் மின்னல் கனகராஜ், பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com