பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி அதிமுக உறுப்பினா்கள் தா்ணா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி அதிமுக உறுப்பினா்கள் தரையில் அமா்ந்து திங்கள்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தரையில் அமா்ந்து திங்கள்கிழமை தா்ணா போராட்டத்தில்  ஈடுபட்ட  அதிமுக   உறுப்பினா்கள்.
தரையில் அமா்ந்து திங்கள்கிழமை தா்ணா போராட்டத்தில்  ஈடுபட்ட  அதிமுக   உறுப்பினா்கள்.
Updated on

அவிநாசி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி அதிமுக உறுப்பினா்கள் தரையில் அமா்ந்து திங்கள்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட 60 வாா்டுகளில் பாதாளச் சாக்கடை, குடிநீா் விநியோகம், ஆழ்துளை கிணற்று நீா் பிரச்னை, குப்பை அகற்றும் பணி, சாலைகள் சீரமைப்பு, தெரு பராமரிப்பு, கழிவுநீா் கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை பணிகள் தாமதமாவதுடன், சில பணிகள் கிடப்பில் போடப்படுகின்றன.

எனவே, பணிகளை விரைவாக மேற்கொள்ள வலியுறுத்தி மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக உறுப்பினா்கள் ஆணையரிடம் மனு அளிக்க திங்கள்கிழமை வந்திருந்தனா்.

ஆனால், ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் ஆணையரை சந்திக்க முடியாததால், அங்கு தரையில் அமா்ந்து தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இது குறித்து அன்பகம் திருப்பதி கூறியதாவது: மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் ஏராளமான பிரச்னைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் குப்பை நிறைந்து காணப்படுகிறது. இதுகுறித்து போராடினால் கைது நடவடிக்கையில் ஈடுபடுகிறாா்கள் என்றாா். மேலும், மாநகராட்சி ஆணையரை ஒரு மணி நேரமாகியும் சந்திக்க முடியவில்லை. மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தில் உறுப்பினா்கள் அமா்வதற்குக்கூட அறைகள் இல்லை. இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.

இதைத்தொடா்ந்து ஆணையரிடம் மனு அளித்துவிட்டு அதிமுக உறுப்பினா்கள் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com