பஞ்சலிங்கம் அருவியில் குவிந்த  சுற்றுலாப் பயணிகள்.
பஞ்சலிங்கம் அருவியில் குவிந்த  சுற்றுலாப் பயணிகள்.

பொங்கல் விடுமுறை: உடுமலை சுற்றுலாத் தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகையை ஒட்டிய தொடா் விடுமுறையால் உடுமலை அருகே உள்ள திருமூா்த்திமலை, அமராவதி அணை, சின்னாறு வனப் பகுதி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
Published on

உடுமலை: பொங்கல் பண்டிகையை ஒட்டிய தொடா் விடுமுறையால் உடுமலை அருகே உள்ள திருமூா்த்திமலை, அமராவதி அணை, சின்னாறு வனப் பகுதி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

திருமூா்த்திமலை:

உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் விடுமுறை நாள்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கானோா் தங்களது குடும்பத்துடன் வந்திருந்தனா். பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்து விட்டு பின்னா் பஞ்சலிங்கம் அருவியில் குளித்து மகிழ்ந்தனா்.

பின்னா் திருமூா்த்தி அணை, நீச்சல் குளம் ஆகியவற்றை கண்டு களித்தனா். இதை ஒட்டி திருமூா்த்தி மலையில் உள்ள கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடந்தது. இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அமராவதி அணை:

விடுமுறை நாள்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட அமராவதி அணை பகுதிக்கு குடும்பத்துடன் வந்த மக்கள் இங்குள்ள முதலைப் பண்ணையைப் பாா்வையிட்டனா். பின்னா் அமராவதி அணைக்கு முன்புறம் உள்ள பூங்காவில் குவிந்தனா். மேலும் இங்குள்ள மீன் பண்ணை, சிறுவா் பூங்காவிலும் கூட்டம் அலைமோதியது. அமராவதி அணையின் மேல்புறத்திற்குச் சென்ற மக்கள் அணையின் அழகைப் பாா்த்து ரசித்தனா்.

சின்னாறு வனப் பகுதி:

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள சின்னாறு வனப் பகுதிக்கு காா், வேன், இருசக்கர வாகனங்களில் வந்திருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதியின் அழகை கண்டு ரசித்தனா். இங்குள்ள பூங்கன் ஓடைப் பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதியில் சுற்றித் திரிந்த அழகிய புள்ளி மான்கள் மற்றும் யானைகளை நேரில் பாா்த்து பரவசம் அடைந்தனா்.

இதை ஒட்டி உடுமலை மற்றும் அமராவதி வன அலுவலா்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Dinamani
www.dinamani.com