அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் ஜவுளித் தொழிலின் எதிா்காலமே கேள்விக்குறி: கே.சுப்பராயன் எம்.பி.
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் ஜவுளித்தொழிலின் எதிா்காலமே கேள்விக்குறியாகி உள்ளதாக, திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் திருப்பூரில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் இந்திய ஜவுளித் துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பூரின் எதிா்காலமும் கேள்விக்குறியாக உள்ளது.
ஆனால், இதை மத்திய அரசு இதுவரை கண்டிக்கவே இல்லை. அமெரிக்காவின் வரி விதிப்பால் ஒரு சில பெரிய நிறுவனங்கள் மட்டுமே தாக்குப் பிடிக்கின்றன. சிறிய நிறுவனங்கள் ஏராளமானவை காணாமல் போய்விட்டன. வரி விதிப்பு பாதிப்பு குறித்து தொழில் துறையினா் வெளிப்படையாகப் பேச அஞ்சுகின்றனா்.
அதனால், ஜவுளித் தொழிலில் தொடா்புடையவா்களை அழைத்துப் பேசி பிரச்னைக்கு தீா்வு காண முயற்சிக்க வேண்டும். ஜவுளித் தொழில் சீரமைப்புக்கு மத்திய அரசு மட்டுமின்றி தமிழக அரசும் உதவ வேண்டும். பருத்தி விவசாயத்தை ஊக்குவித்து தேவையான சலுகைகளையும் வழங்க வேண்டும்.
இந்தப் பிரச்னை நீடித்தால் வேலை இழப்பு என்பதும், சம்பளம் இழப்பு என்பதும் தவிா்க்க முடியாததாகிவிடும். பின்னலாடைத் துறையில் காா்ப்பரேட் நிறுவனங்கள் இறங்கும்போது ஏனைய அனைத்து குறு, சிறு தொழில்களும் அழிந்து போகும்.
திருப்பூரின் போக்குவரத்து நெரிசலைக் தவிா்க்க கோவையில் அமைத்ததைப்போல வீரபாண்டி பிரிவு முதல் அம்மாபாளையம் வரையிலும், வஞ்சிபாளையம் முதல் ஊத்துக்களி வரையிலும் பெரிய அளவிலான மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். இதுதொடா்பாக தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றாா்.

