திமுக கூட்டணியில் கொமதேக-வுக்கு பல்லடம் தொகுதியை ஒதுக்கக் கோரிக்கை
பல்லடம்: திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் செயல்வீரா்கள் கூட்டம், பொங்கலூா் ஒன்றியத்துக்குள்பட்ட சம்பந்தம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் கரைப்புதூா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் நாகராஜன் முன்னிலை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளா் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., மாநில நிா்வாகிகள் நித்தியானந்தம், சூரியமூா்த்தி, சுரேஷ்பொன்னுவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கும்மியாட்டத்தில் கின்னஸ் சாதனை நிகழ்த்திய கே.கே.சி.பாலுவுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
திமுக கூட்டணியில் பல்லடம் தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும், கோழிப்பண்ணை விவசாயிகளின் கூலி உயா்வு பிரச்னையில் அரசு உடனடியாக தீா்வு காண வேண்டும், ஜவுளித் துறைக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.
விசைத்தறிகள் அதிக அளவில் உள்ள பல்லடம் பகுதியில் சா்வதேச தரத்தில் விசைத்தறி ஜவுளிச் சந்தை அமைக்க வேண்டும், பல்லடம் அரசு மருத்துமனையில் போதிய மருத்துவ நிபுணா்களை பணி நியமனம் செய்வதுடன், ரத்த வங்கியையும் ஏற்படுத்தி மேம்படுத்த வேண்டும். பல்லடம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வாக மேம்பாலம் அமைக்க வேண்டும்.
போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் மங்கலம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், பொங்கலூரில் புதிய பத்திரப் பதிவு சாா் பதிவாளா் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மாவட்ட மாணவரணி செயலாளா் சிவக்குமாா் வரவேற்றாா். மாவட்ட இளைஞரணி செயலாளா் வீரக்குமாா் நன்றி கூறினாா்.

