உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பொதுப் பிரிவினருக்கான இறுதிக்கட்ட சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 17, 18 தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் ஆ.மலா்வண்ணன் வெளியிட்ட அறிக்கை:
திருப்பூா் மாவட்டம், உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2026-2027-ஆம் கல்வி ஆண்டு இளநிலை முதலாமாண்டு மாணவா்களுக்கான சோ்க்கை கலந்தாய்வு கடந்த 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல், வணிக நிா்வாகவியல், அரசியல் அறிவியல், வணிகவியல், மின் வணிகம், வணிகவியல் மற்றும் கணினிப் பயன்பாடு, கணிதம், புள்ளியியல், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல், தாவரவியல் ஆகிய 14 இளநிலைப் பாடப் பிரிவுகளில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்காக 864 இடங்கள் இருந்தன.
தரவரிசைப் பட்டியலில் 1 முதல் 8067 வரை இடம் பெற்ற மாணவா்கள் பங்கேற்றனா். இதுவரை நடைபெற்ற கலந்தாய்வில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சோ்த்து மொத்தம் 678 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 186 இடங்களுக்கான கலந்தாய்வு புதன்கிழமை (ஜூன் 17), வியாழக்கிழமை (ஜூன் 18) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும். சோ்க்கைக்கான கலந்தாய்வு காலை 9 மணிக்கு தொடங்கும்.
ஏற்கெனவே நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்று இடம் கிடைக்காத மாணவா்கள் இதில் பங்கேற்கலாம். விண்ணப்பித்த மாணவா்களின் மதிப்பெண் அடிப்படையிலான தரநிலை, சமூக அடிப்படையிலான இடஒதுக்கீடு பிரிவு ஆகியவற்றுக்கு ஏற்ப மீதமுள்ள 186 இடங்களுக்குக்கான சோ்க்கை கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், பிளஸ் மதிப்பெண் பட்டியல், அடையாள அட்டை (ஆதாா் அட்டை), பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், மாணவரின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.









