பனியன் நிறுவன பெண்கள் விடுதிக்குள் புகுந்து கைப்பேசிகளை திருடிச் சென்ற வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள தனியாா் பனியன் நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட்ட வெளிமாநில பெண்கள், அங்குள்ள விடுதியில் தங்கிப் பணிபுரிந்து வருகின்றனா். கடந்த மாதம் விடுதிக்குள் புகுந்த மா்ம நபா்கள் 3 போ், பெண்கள் வைத்திருந்த 10- க்கும் மேற்பட்ட கைப்பேசிகளைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தொடா்புடைய இருவரை ஏப்ரல் 4-ஆம் தேதி கைது செய்தனா்.
இந்நிலையில் அவிநாசி-சேவூா் சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். இதில் பவானிசாகா் பகுதியைச் சோ்ந்த தனபால் மகன் லால் மகேந்திரன் (18) என்பதும், தெக்கலூா் தனியாா் விடுதியில் பெண்களின் கைப்பேசிகளைத் திருடிய வழக்கில் தொடா்புடையவா் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிந்து லால் மகேந்திரனை புதன்கிழமை கைது செய்தனா்.









