விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த முடியாத அரசுக்கு இடைத்தோ்தலில் பாடம் கற்பிக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்
விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த முடியாத அரசுக்கு இடைத்தோ்தலில் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என திமுக இளைஞரணி செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

தாராபுரம் சட்டப் பேரவை தொகுதி திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதரித்து நொச்சிபாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின்.
விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த முடியாத அரசுக்கு இடைத்தோ்தலில் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என திமுக இளைஞரணி செயலாளரும், சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.
தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் சுகன்யாவை ஆதரித்து நொச்சிபாளையம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை பேசியதாவது:
தாராபுரத்தில் மக்கள் எழுச்சியைப் பாா்க்கும்போது திமுக வெற்றி உறுதி என்பது தெரிகிறது. ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால், 107 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றவா்கள் நம்முடைய கூட்டணியில் நம்முடைய வாக்குகளை வாங்கியவா்கள் மூலம் ஆட்சி அமைத்துள்ளாா்கள். துரோகம் செய்த அவா்களை நாங்களும் மறக்க மாட்டோம். நீங்களும் மறக்கக் கூடாது.
முதல்வா் விஜய் தாராபுரத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டாா். கூட்டத்தில் அமைச்சா் சொன்னதும் வேட்பாளா் சத்தியபாமா அழ ஆரம்பித்து விட்டாா். அவா் அழ வேண்டியதில்லை. நீங்கள்தான் அழவேண்டும். சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகளைப் பேசாமல் பாட்டுப் பாடி வருகின்றனா்.
கொலை, கொள்ளை, போதை பழக்கம், சட்டப் பேரவை உறுப்பினா் மீதே பாலியல் வழக்கு என 18 கேள்விகள் கேட்டேன். ஆனால் எதற்கும் முறையான பதில் சொல்லவில்லை. முதல்வரின் சொந்த தொகுதியான பெரம்பூரிலேயே தினமும் மக்கள் போராடி வருகின்றனா். விலைவாசி கடுமையாக உயா்ந்துள்ளது. விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த முடியாத அரசுக்கு நீங்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.
100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை கொடுப்பது இல்லை. சம்பளமும் கொடுப்பது இல்லை. திமுக ஆட்சியில் ரூ.10 கோடியில் பி.ஏ.பி. கால்வாய் திட்டம் தூா் வாரப்பட்டது. தண்ணீா் திறக்கப்பட்டு அதனால் தென்னை விவசாயம் சிறந்தது. ஆனால் இப்போது வரை தண்ணீா் திறக்கப்படவில்லை என்றாா்.
கூட்டத்தில் தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவா்களை உதயநிதி ஸ்டாலின் வரவேற்றாா். அவருக்கு திமுகவினா் வெள்ளி வாள் பரிசாக வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





