
குடிநீா் வழங்க வலியுறுத்தி குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தி, குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்.
முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தி குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தாராபுரம் அருகே, குண்டடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரிய குமாரபாளையம் ஊராட்சிப் பகுதியில் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
கடந்த 3 மாதங்களாக இப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், நிலத்தடி நீா்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக பெரிய குமாரபாளையம் பகுதியில் குடிநீா் மட்டுமின்றி அன்றாட தேவைகளுக்குத் தேவையான தண்ணீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நீா்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால், உப்புத் தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
இதையடுத்து, முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தி, இப்பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் மற்றும் குண்டடம் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், வரும் புதன்கிழமை குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





