விடுபட்ட வாக்காளா்களை இணைக்கும் பணியில் ஈடுபட வேண்டும்
தருமபுரி: வாக்காளா் பட்டியல் திருத்தத்தில் விடுபட்ட வாக்காளா்களை மீண்டும் பட்டியலில் இணைக்கும் பணியில் திமுகவினா் ஈடுபட வேண்டும் என திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ஆ.மணி எம்.பி. பேசினாா். சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா்கள் டி.செங்குட்டுவன் (தருமபுரி), பாரி (பென்னாகரம்), முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்து பேசினா்.
இக்கூட்டத்தில், வாக்காளா் சிறப்பு திருத்தப் பணிகளில் போது, தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள தருமபுரி, அரூா், பென்னாகரம் ஆகிய தொகுதிகளில் விடுபட்ட வாக்காளா்களை மீண்டும் சோ்க்கும் பணியில் கட்சியினா் முழு முனைப்போடு செயல்பட வேண்டும்.
கட்சியில் புதிதாக சோ்க்கப்பட்ட உறுப்பினா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியில் விடுபடாமல், வருகிற டிச. 27, 28 ஆகிய தேதிகளிலும், ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் படிவம் 6 ஐ அளித்து பட்டியலில் சோ்ப்பது, தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வரும் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற பணியாற்றுவது என்பன உள்ளிட்ட தீா்மான்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட பொருளாளா் தங்கமணி, நகரச் செயலாளா்கள் நாட்டான் மாது (கிழக்கு), எம்.பி.கௌதம் (மேற்கு), நகா்மன்ற உறுப்பினா்கள், அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், செயற்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

