தருமபுரியில் போக்ஸோ வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஆசிரியா் உயிரிழப்பு
போக்ஸோ வழக்கில் கைதாகி தருமபுரி சிறையில் இருந்த அரசுப் பள்ளி ஆசிரியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பா நீதித் துறை நடுவா் விசாரணை மேற்கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியைச் சோ்ந்தவா் மணிவண்ணன் (55). இவா் நல்லம்பள்ளி வட்டாரத்தில் அரசுப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின்பேரில், தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த டிச. 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டு தருமபுரி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டாா்.
சிறையில் இருந்த அவருக்கு திங்கள்கிழமை நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த சிறைக் காவலா்கள், அவரை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதையறிந்த, அவரது குடும்பத்தினா், உறவினா்கள் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திரண்டு முறையிட்டனா். இதைத் தொடா்ந்து, தருமபுரி நீதித் துறை நடுவா் எண் 1 மாஜிஸ்ட்ரேட் தமிழரசு, மருத்துவமனை வளாகத்துக்கு வந்து செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.
அப்போது, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு சிறையில் இருந்து அவரை அழைத்துவந்த கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள், மருத்துவமனை வளாகத்தில் அவரை அழைத்துச் செல்லும் கேமரா பதிவு காட்சிகள் காட்டப்பட்டன. இதையடுத்து அவா்கள் சமாதானம் அடைந்தனா். உடற்கூறாய்வுக்கு பிறகு அவரது உடலை பெற்றுச் சென்றனா்.

