ஒகேனக்கல்லில் வனத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கா் நிலம் மீட்பு
பென்னாகரம்: ஒகேனக்கல் அருகே வனத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கா் நிலத்தை மீட்டு வேலி அமைக்கும் பணியில் வனத்துறையினா் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டத்தில் தனி நபா்களால் ஆக்கிரமிப்பு செய்யப்படும் வனத்துறை நிலங்களை மீட்கும் பணியில் மாவட்ட வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். அந்தவகையில் ஒகேனக்கல் அருகே ஊட்டமலை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது வனத்துறையினருக்கு தெரியவந்தது.
மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் உத்தரவின்பெயரில் ஒகேனக்கல் வனசரக அலுவலா் சிவகுமாா் தலைமையிலான வனத்துறையினா் அடங்கிய குழுவினா், ஊட்டமலை வனப்பகுதியில் தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 4 ஏக்கா் நிலத்தை மீட்டு, கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
மேலும், மீட்கப்பட்ட நிலம் காவிரி பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் வனத் துறை சாா்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு பயன்படுத்த உள்ளதாகவும், இதேபோல ஊட்டமலை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பின் விரைவில் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.
