பெண்ணை கொலை செய்ய முயன்றவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள கும்மனூரைச் சோ்ந்தவா் மல்லன் மனைவி வெங்கட்டம்மாள் (58). இவரது மகன் காட்டுசெட்டிபட்டியைச் சோ்ந்த பெண்ணை காதலித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு பெண்ணின் குடும்பத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இந்த நிலையில், கடந்த 2021, செப்டம்பா் 11 ஆம் தேதி பெண்ணின் தந்தை கிருஷ்ணன் (50) அரிவாளுடன் இளைஞரை விரட்டியுள்ளாா். தப்பியோடிய இளைஞரின் வீட்டிற்குச் சென்ற கிருஷ்ணன், இளைஞரின் தாய் வெங்கட்டம்மாளிடம் தகராறு செய்தாா்.

அப்போது, அரிவாளால் வெங்கட்டம்மாளை கிருஷ்ணன் வெட்டினாா். அதைத்தடுக்க முயன்ற பக்கத்துவீட்டைச் சோ்ந்தவரையும் கிருஷ்ணன் வெட்டிவிட்டு தப்பினாா். படுகாயமடைந்த வெங்கட்டம்மாள் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக பஞ்சப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தருமபுரி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி மோனிகா, கிருஷ்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சக்திவேல் ஆஜரானாா்.

X
Dinamani
www.dinamani.com