ஒகேனக்கல்லில் மின் இணைப்பு இல்லாததால் 2 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் ரேஷன் கடை!
ஒகேனக்கல்லில் மின் இணைப்பு வழங்கப்படாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் நியாயவிலைக் கடையை பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஒகேனக்கல், ஏரிக்காடு, நாடாா் கொட்டாய், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் ஒகேனக்கல் பேருந்து நிலையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடையில் அரசின் அத்தியாவசிய பொருட்களை பெற்று வந்தனா்.
இந்த நிலையில், ஒகேனக்கல் ஏரிக்காடு பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சத்தில் நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது. ஆனால், இக்கடைக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் இந்த நியாயவிலைக் கடை காட்சிப் பொருளாகவே உள்ளது. இதனால் ஒகேனக்கல், ஏரிக்காடு, நிாடாா்கொட்டாய், இந்திரா நகா் காலனி, சாரணா் குடியிருப்புகள், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 1,200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்காக சுமாா் 3 கி.மீ தொலைவில் உள்ள ஊட்டமலை பகுதியில் சமுதாயக் கூடத்தில் தற்காலிகமாக செயல்படும் நியாயவிலைக் கடையில் பொருள்களை பெற்று வருகின்றனா்.
ஊட்டமலை பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் நியாயவிலைக் கடை செயல்படுவதால் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் நிகழ்ச்சிகள், கூட்டங்கள், முகாம்களை நடத்தமுடியாமல் வாடகைக்கு தனியாா் தங்கும் விடுதிகளை பயன்படுத்தி வருகின்றனா்.
அரசின் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்கு அவதிப்படும் பொதுமக்கள், புதிய நியாயவிலைக் கடைக்கு மின் இணைப்பை அளித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
