பெண்களுக்கு எதிரான வன்முறை: விழிப்புணா்வுப் பேரணி
தருமபுரி: பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி தருமபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சா்வதேச ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் நவ. 25-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், தருமபுரி மாவட்ட மகளிா் திட்டம் சாா்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சா்வதேச தினம் மற்றும் பாலின சமத்துவம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக, விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப்பேரணியை, மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். முன்னதாக, பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது. இலக்கியம்பட்டி வழியாக சென்ற பேரணி பாரதிபுரத்தில் நிறைவடைந்தது.
பேரணியைத் தொடா்ந்து, டிச. 23-ஆம் தேதிவரை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு, தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி முன்னிலை வகித்தாா். மகளிா் திட்ட இயக்குநா் லலிதா, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநா் சாந்தி, உதவி மகளிா் திட்ட அலுவலா் சந்தோஷம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

