தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் பொதுவாக நான்கு முனைப் போட்டியை எதிர்கொள்கிறது என்றால், தருமபுரி பேரவைத் தொகுதி ஐந்து முனைப் போட்டியை எதிர்கொள்கிறது. பாமக சார்பில் அதன் தலைவர் அன்புமணி, நிறுவனர் ராமதாஸ் இருவர் தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்பட்ட தொகுதிகளில் இதுவும் ஒன்று என்பதே அதற்குக் காரணம்.
தொகுதி மக்களின் தேவைகள்: தருமபுரி தொகுதியைப் பொருத்தவரை விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழில். பருவமழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யும் சூழ்நிலை. விவசாயிகளின் பிரச்னைகளைக் களைய நீர் செறிவூட்டும் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். இதற்காக மாசடைந்த சனத்குமார் நதியை தூர்வாரி, அகலப்படுத்தி, அதை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்.
இத்தொகுதியைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்காக தருமபுரியில் நிலம் கையகப்படுத்தப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகள் தொடங்கி வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்டவை பிரதான கோரிக்கைகள்.
இண்டூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்க வேண்டும். தருமபுரி நகரை விரிவாக்கம் செய்து, போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அரசு பல்நோக்கு உயர்சிகிச்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும். தருமபுரி தொகுதி முழுவதும் அனைத்து கிராமங்களிலும் புளோரைடு பாதிப்பு இல்லாத ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பன மக்கள் தொடர்ந்து வலியுறுத்தும் கோரிக்கைகளாக உள்ளன.
சமூக நிலவரம்: தருமபுரி தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்ததாக ஆதிதிராவிடர், , செட்டியார், நாயுடு, முதலியார், கொங்கு வெள்ளாளக் கவுண்டர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். வன்னியர் சமூகத்தினர் அடர்த்தியாக இருப்பதால், அவர்களது வாக்குகளே வெற்றி, தோல்வியை நிர்ணயித்து வருகின்றன.
களத்தில் வேட்பாளர்கள்: திமுக கூட்டணி சார்பில் தேமுதிக போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி (அன்புமணி) வேட்பாளர் செüமியா அன்புமணி போட்டியிடுகிறார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எம். சிவன், நாம் தமிழர் கட்சி சார்பில் கி. சாந்தலட்சுமி, பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ்) சார்பில் வேட்பாளர் அ. சரவணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்களைத் தவிர, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர் பிரசாந்த் மற்றும் சிறு கட்சிகள், சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.
தேமுதிக வேட்பாளர் மருத்துவர் வி. இளங்கோவன்: திமுக கூட்டணியில் தருமபுரி தொகுதியில் தேமுதிக வேட்பாளராக அக்கட்சியின் மாநில அவைத் தலைவர் மருத்துவர் வி. இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர், கடந்த 2016}இல் மக்கள் நலக் கூட்டணியில் இத்தொகுதியில் போட்டியிட்டுள்ளார். எனவே, தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். விஜயகாந்த் கட்சி தொடங்கியதில் இருந்து அவருடன்தொடர்ந்து பயணித்து வருகிறார். அக்கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலர், மாநிலப் பொருளாளர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர்.
பாமக வேட்பாளர் செüமியா அன்புமணி: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பசுமைத் தாயகம் தலைவர் செüமியா அன்புமணி போட்டியிடுகிறார். இவர் கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டவர் என்பதாலும், கடந்த 2014, 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2016 சட்டப் பேரவைத் தேர்தல்களில் இந்தத் தொகுதியில் தங்கி, அன்புணி ராமதாஸýக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளார். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.
பாமக (ராமதாஸ்) வேட்பாளர் அ. சரவணன்: பாமக ராமதாஸ் பிரிவு சார்பில், தருமபுரி தொகுதியில் அக்கட்சியின் மாவட்டச் செயலர் அ. சரவணன் போட்டியிடுகிறார். இவர், ஒருங்கிணைந்த பாமகவில் மாநில துணைப் பொதுச் செயலராக 12 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதேபோல, பாமகவுக்கு கடந்த 2016 வரை பல்வேறு தேர்தல்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொகுதி குறித்தும் அறிந்தவர். தொகுதி மக்களுக்கும் அறிமுகமானவர்.
தவெக வேட்பாளர் எம். சிவன்: தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அக்கட்சியின் மாவட்டச் செயலர் தாபா சிவா என்ற எம். சிவன் போட்டியிடுகிறார். இவர், நடிகர் விஜய் ரசிகர் மன்ற தருமபுரி மாவட்டச் செயலராக தொடக்கக் காலத்திலிருந்து செயலாற்றி வருகிறார். எனவே, மாவட்டத்தையும், தொகுதியையும் அறிந்தவர். மக்களுக்கு ஓரளவு அறிமுகமானவர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கி. சாந்தலட்சுமி: தருமபுரி காந்தி நகரைச் சேர்ந்த கி. சாந்தலட்சுமியை நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
தமிழ் தேசியத்தை முன்வைத்து பிரசாரம் செய்துவரும் இவருக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தருமபுரி தொகுதியில் திமுக இதுவரை 5 முறையும், பாமக 3 முறையும், தேமுதிக, அதிமுக, ஜனதா கட்சி தலா ஒருமுறையும், காங்கிரஸ் 3 முறையும், கடந்த 1951 மற்றும் 1962 என 2 முறை சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2001}இல் இருந்து ஒருங்கிணைந்த பாமக} அதிமுக, திமுக கூட்டணி, தனித்து என தொடர்ந்து 5 முறை போட்டியிட்டுள்ளது. இதில், 3 முறை வெற்றி பெற்றுள்ளது.
அதிக முறை வெற்றி பெற்ற திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தற்போது ஒரே கூட்டணியில் இருப்பதால், இயல்பாகவே திமுக கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளர் மருத்துவர் வி. இளங்கோவனுக்கு அது பலமாக இருக்கக்கூடும்.
ஐந்து முறை போட்டியிட்டு மூன்று முறை வெற்றி பெற்றிருப்பது மற்றும் தொகுதியில் வன்னியர் வாக்குகள் அடர்த்தியாக இருப்பது மற்றும் பாமக தலைவரின் மனைவி செüமியா அன்புமணி நேரடியாகக் களம்காண்பது போன்றவை தேர்தலில் அவருக்கு பலமாக இருக்கும். அதேவேளையில் பாமக (ராமதாஸ்) சார்பில் வேட்பாளர் அ.சரவணன் வன்னியர் சமூக வாக்குகளைப் பிரிக்கக்கூடும்.
கடந்த 1962}க்குப் பிறகு இதுவரை திமுக, அதிமுக சார்பிலும், கூட்டணிக் கட்சிகள் சார்பிலும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே இந்தத் தொகுதியில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு வந்தனர். தற்போது முதல்முறையாக வன்னியர் அல்லாத ஒருவர் திமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் செல்வாக்கை முன்வைத்து தவெக வேட்பாளரும், சீமானின் மாற்று சிந்தனையை முன்வைத்து நாம் தமிழர் வேட்பாளரும் பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் கணிசமான வாக்குகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. ஐந்துமுனைப் போட்டியில் வெல்வது யார் என்கிற எதிர்பார்ப்பை அதிகம் ஏற்படுத்தியிருக்கிறது தருமபுரி தொகுதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல்: அரியலூரில் திமுக - அதிமுக மீண்டும் பலப்பரீட்சை!

அண்ணாமலை தவிர முக்கிய நிர்வாகிகளை ஓரங்கட்டிய பாஜக!

தொகுதி மாறி போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள்

குன்னம் தொகுதி ஊரறிந்த ரகசியம்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


