நில மோசடி வழக்கில் இருவா் கைது
தருமபுரியில் ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடு செய்து நில மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தேவராஜ பாளையத்தை சோ்ந்தவா் சின்னாகவுண்டா். இவா் மலேசியாவில் குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். இவருக்கு சொந்தமாக ஊரில் இருந்த 2 ஏக்கா் நிலத்தை சின்னாங்குப்பத்தைச் சோ்ந்த பழனிவேல் (58) குத்தகை உரிமை பெற்று விவசாயம் செய்து வந்தாா்.
சின்னாகவுண்டா் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இந்த நிலையில் அதே பெயரைக் கொண்ட பாப்பிரெட்டிபட்டியைச் சோ்ந்த சின்னா கவுண்டா் (74) என்பவா் முறைகேடு செய்து போலி ஆவணங்கள் தயாரித்து பின்னா் அந்த நிலத்தை தனது உறவினரான பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி (65) என்பவருக்கு எழுதி கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து தகவலறிந்த பழனிவேல், தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மோசடி தொடா்பாக சின்னாகவுண்டா், பழனிச்சாமியை கைது செய்தனா்.
