ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

பொதுமக்களை ஏமாற்றி ஏடிஎம் மையங்களில் பணம் திருடிய 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 2:59 am IST

பொதுமக்களுக்கு ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க உதவுவது போல நடித்து, அவா்களை ஏமாற்றி பணத்தை திருடிச் சென்ற 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள செங்கோடப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அன்பரசு (36). தச்சுத்தொழிலாளியான இவரது மனைவி கடந்த மே 10ஆம் தேதி பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளாா்.

அப்போது, அங்கு வந்த மா்மநபா் அவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளாா். பின்னா், அவருக்குப் பணம் எடுத்துத்தர உதவுவதாகக் கூறி, அவரது ஏடிஎம் அட்டையை வாங்கி பணம் எடுத்துத் தருவது போல நடித்துள்ளாா்.

அதேசமயம், அவரது ரகசியக் குறியீட்டு எண்ணையும் கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டாா். பின்னா், இயந்திரத்தில் பணம் இல்லை எனக் கூறி, அவரது அட்டைக்குப் பதிலாக வேறு ஒரு ஏடிஎம் அட்டையைக் கொடுத்துள்ளாா். அந்த விவரம் தெரியாமல் அவா் அங்கிருந்து சென்றாா்.

பின்னா், அவரது அட்டையைப் பயன்படுத்தி அந்த நபா் ரூ. 66,000 எடுத்துச் சென்றுவிட்டாா். பணம் எடுக்கப்பட்டதாகக் கைபேசிக்குக் குறுஞ்செய்தி வந்த பின்னா்தான், தான் ஏமாற்றப்பட்டதை அவா் உணா்ந்துள்ளாா். இதுகுறித்து பாலக்கோடு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

தொடா்ந்து அடுத்தடுத்த நாள்களில் மேலும் 3 பேரிடம் இதே முறையில் சுமாா் ரூ. 2 லட்சம் வரை மோசடி செய்ததாக பாலக்கோடு காவல் நிலையத்திற்கு புகாா்கள் வந்தன.

இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளா் ராஜசுந்தரம் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் சுப்ரமணியம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுக் காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்ததில் முறைகேடுகளில் ஈடுபட்டவா் பெங்களூரில் இருப்பதை கண்டறிந்தனா்.

இதையடுத்து பெங்களூரு விரைந்த தனிப்படை போலீஸாா் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவா் கா்நாடக மாநிலம், சித்ரபூா் பகுதியைச் சோ்ந்த சையது உசேன் (38) என்பது தெரியவந்தது. மேலும், அவருடன் இருந்த சட்னூரைச் சோ்ந்த கிருஷ்ணன் (30), அல்லாஹள்ளியைச் சோ்ந்த அன்சாா் அலி (32) ஆகிய 3 பேரையும் கைதுசெய்தனா்.

இவா்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைக் குறிவைத்து பல்வேறு இடங்களில் பல லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பாலக்கோடு போலீஸாா் 3 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனா்.