நாமக்கல், ஜன.8: பொங்கல் பண்டிகையையொட்டி திமுக சார்பில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துமாறு திமுகவினரை அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சருமான செ. காந்திசெல்வன் கேட்டுக்கொண்டார்.
நாமக்கல் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து காந்திசெல்வன் பேசியது:
பொங்கல் தினத்தை மாவட்டம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். இவ்விழாவையொட்டி, திமுக சார்பில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும். போட்டிகளில் இளைஞர்களை அதிகளவு பங்கேற்க வைத்து பரிசளிக்க வேண்டும்.
நாமகிரிபேட்டையில் சமத்துவபுரம் கட்டும் பணி நிறைவடைந்து விட்டது. அதனைத் திறந்து வைக்க துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் நாமக்கல் வருகிறார். அப்போது நாமக்கல் குடிநீர்த் திட்டத்தையும் அவர் தொடக்கி வைக்கிறார். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணி இப்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. அந்த வளாகத்தின் திறப்பு விழாவும் விரைவில் நடத்தப்படும் என்றார்.