கறவைப் பசுக்கள் திட்டத்தால் பால் உற்பத்தி அதிகரிப்பு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ள கறவைப் பசுக்கள் திட்டத்தால்
Updated on
2 min read

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ள கறவைப் பசுக்கள் திட்டத்தால் சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமான லிட்டர் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, இதைச் சார்ந்துள்ள குடும்பங்களின் மாத வருவாயும் சராசரியாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் ஏழை, நடுத்தர மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கறவைப் பசுக்கள் இலவசமாக அளிக்கப்படுமென முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதன்படி, மாவட்டங்கள் வாரியாகப் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.30 ஆயிரம் மதிப்பிலான கறவைப் பசு அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அண்டை மாநிலங்களுக்குச் சென்று கறவைப் பசுக்களை வாங்குவதற்கு தலா ரூ.ஆயிரமும், அவற்றைக் கொண்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவு மாவட்டத்துக்கு ஏற்ப ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரையிலும் வழங்கப்பட்டு வருகிறது.

கால்நடைத் துறை மூலம் அளிக்கப்பட்டு வரும் இலவச கறவைப் பசுக்களுக்கான காப்பீட்டுச் செலவை அரசே ஏற்றுக் கொள்கிறது. இதுதவிர, கறவைப் பசுக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம், கால்நடை பசுந்தீவனத்தை ஆவின் மூலம் கிலோ ரூ.16-க்கு கொள்முதல் செய்து ரூ.4 மானியம் அளித்து பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பசுந்தீவனத்துக்கான தொகை, பயனாளிகள் அன்றாடம் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ஆவின் நிறுவனத்துக்கு அளிக்கும் பாலுக்கான தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனத்துக்கு இலவச கறவைப் பசுக்கள் மூலம் கொடுக்கும் பாலில் 4.2 சத கொழுப்பு இருந்தால் லிட்டருக்கு ரூ.23 அளிக்கப்படுகிறது. ஆவன் நிறுவனத்துக்கு பயனாளிகள் அளிக்கும் பாலுக்கான தொகை வாரந்தோறும் பட்டுவாடா செய்யப்படுகிறது.

இலவச கறவைப் பசுக்கள் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்தில் தலா 150 வீதம் இதுவரையில் ரூ.1.59 கோடியில் 450 கறவைப் பசுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், கடந்த 3 ஆண்டுகளில் 315 கன்றுகள் ஈன்றுள்ளதோடு, நாளொன்றுக்கு 3,600 லிட்டர் பால் கூடுதலாக ஆவின் நிறுவனத்துக்கு கிடைத்து வருகிறது. இதற்காக 9 புதிய பால் கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த 3 ஆண்டுகளில் அளிக்கப்பட்டுள்ள கறவைப் பசுக்கள் மூலம் 300-க்கும் அதிகமான கன்றுகள் ஈன்றுள்ளதோடு, நாளொன்றுக்கு சுமார் 3,500 லிட்டர் பால் கிடைத்து வருகிறது.

தமிழக அரசு செயல்படுத்தி வரும் கறவைப் பசுக்கள் திட்டத்தால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரம் குடும்பங்கள் வாழ வழி கிடைத்திருப்பதுடன், பால் உற்பத்தியும் கணிசமாக உயர்ந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கிருஷ்ணகிரி ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியது: தமிழக அரசு அளித்து வரும் இலவச கறவைப் பசுக்கள் திட்டத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ஆவின் நிறுவனத்துக்கு கூடுதலாக நாளொன்றுக்கு 7 ஆயிரம் லிட்டர் பால் கிடைத்து வருகிறது.

இந்தத் திட்டத்தை மேலும் ஊக்குவித்து பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இலவசமாக சிறப்பு மருத்துவ முகாம்கள், மானிய விலையில் பசுந்தீவனங்களும் அளிக்கப்பட்டு வருகின்றன.

வெண்மைப் புரட்சியை ஏற்படுத்துவதோடு, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தால் பால் உற்பத்தியில் தமிழகம் விரைவில் தன்னிறைவை எட்டி விடும் என்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com