இளவரசன் உயிரிழந்த வழக்கை விசாரிக்கும், ஒரு நபர் ஆணையம் தருமபுரியில் முகாமிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் விசாரணைக்கு ஆஜராகினர்.
தருமபுரி மாவட்டம், நாய்க்கன்கொட்டாய் அடுத்த நத்தம் காலனியைச் சேர்ந்தவர் இளவசரன். வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளவசன், கடந்த 2013 ஜூலை, 4-ஆம் தேதி, தருமபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இளவரசன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை இளங்கோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இதனையடுத்து, இவ்வழக்கை விசாரிக்க தமிழக அரசு, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலு தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இந்த வழக்கில், ஒரு நபர் விசாரணை ஆணையம், இளவரசனின் பெற்றோர் இளங்கோ, கிருஷ்ணவேணி, திவ்யா அவரது தாய் தேன்மொழி உள்பட 70-க்கும் மேற்பட்ட சாட்சிகளின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தது.
இந்த நிலையில், தருமபுரி பயணியர் மாளிகையில் புதன்கிழமை ஒருநபர் விசாரணை ஆணையம் மீண்டும் முகாமிட்டு விசாரணை நடத்தியது. இதில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவர் அ.சங்கர் மற்றும் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி ஆகியோர் நீதிபதி முன், விசாரணைக்கு நேரில் ஆஜராகினர்.இந்த ஆணையத்தின் விசாரணை முகாம் வியாழக்கிழமையும் (நவ.16) தொடர்ந்து நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.