8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

தருமபுரியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவத் திருத்தலங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமபத வாசல் திறக்கப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

தருமபுரியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவத் திருத்தலங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமபத வாசல் திறக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி அதகப்பாடி ஸ்ரீ லட்சுமி நாராயணர் சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 4 மணி முதல்  மூலவருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து 4.30 மணிக்கு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத லட்சுமி நாராயணர் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, கோயிலின் மாடவீதிகளில் உலா வந்த பின்பு உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில்,  அதகப்பாடி,  இண்டூர், தருமபுரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்  குளிரையும், பனியையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, பரமபத வாசல் திறப்பு விழாவில் பங்கேற்ற, பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
தருமபுரி கடைவீதியில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயிலில், அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பரமபத வாசல் வழியாகக் காட்சியளித்த உற்சவரை, தருமபுரி நகரப் பகுதி மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். இதேபோல, ஆட்டுக்காரன்பட்டி ராதேகிருஷ்ணர் திருக்கோயில், செட்டிக்கரை வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில், மூக்கனூர் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில், அதியமான்கோட்டை ,  காரிமங்கலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வைணவத் திருத்தலங்களில்  பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதில், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி  மற்றும் அதைச் சுற்றியுள்ள பெருமாள் கோயில், கிருஷ்ணன் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி  சொர்க்க வாசல் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபத வாசல் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வடக்கு மாட வீதியில் உள்ள அருள்மிகு நவநீத வேணுகோபால் சுவாமி கோயிலில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பரமபத வாசல் வழியாக  வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 
அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, சீதேவி,  பூதேவி சமேதராய் நவநீத வேணுகோபால் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து  சுவாமியை தரிசித்து சென்றனர்.
கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி வேணுகோபால் சுவாமி கோயில், பழையபேட்டை அருள்மிகு லட்சுமி நாராயணசுவாமி கோயில், காட்டு வீர ஆஞ்சநோயர் கோயில் வளாகத்தில் உள்ள வெங்கடரமண சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. 
ஒசூரில்...
ஒசூர், தேன்கனிக்கோட்டை,  சூளகிரி, அஞ்செட்டி  ஆகிய வட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில்  வைகுண்ட  ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
ஒசூர் மலைக் கோயில்  ஸ்ரீ தேவி,  பூதேவி,  ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள் ஆலயத்தில் அதிகாலை முதலே பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.  அதேபோன்று  கோகுல்நகர் கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில்,   வேணுகோபால்சுவாமி திருக்கோயில்,  மோரனப்பள்ளி நரசிம்மர் கோயில், பாகலூர்  பேரிகை சாலையில் உள்ள குடிசெட்லு திம்மராய சுவாமி கோயில்,  தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி திருக்கோயில், காமன்தொட்டி ஊராட்சி கோபசந்திரம் வெங்கடேசப்பெருமாள் கோயில்,  சூளகிரி வரதராஜபெருமாள் கோயில் உள்ளிட்ட   விஷ்ணு ஆலயங்களில் சொர்க்க வாசல் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
சூளகிரி அருகே கோபசந்திரத்தில் உள்ள தட்சிண திருப்பதி என்று போற்றப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் அதிகாலை மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு 
பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து சொர்க்க வாசல் வழியாக சுவாமி எழுந்தருளினார்.  அப்போது, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கம் எழுப்பினர். விழாவையொட்டி,  சுவாமி  சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் விழாவை முன்னிட்டு,  கோயில் வளாகத்தில் நாகஸ்வர கச்சேரி, பரத நாட்டிய  நிகழ்ச்சி, பக்தி சொற்பொழிவு மற்றும் வீணை கச்சேரி ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
போச்சம்பள்ளியில்...
பண்ணந்தூர்  பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. 
போச்சம்பள்ளி அருகேயுள்ள பண்ணந்தூர் சென்னகேசவபெருமாள் கோயிலில் மோகினி அலங்காரத்தில் உற்சவர் சென்னகேசவப் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அரசம்பட்டி,  பாரூர்,  சென்றாயமலை சென்றாய பெருமாள் கோயில் உள்ளிட் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு சொர்க்க வாசல் வழியாக சுவாமி பிரவேசித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா என்று பக்தி முழக்கங்களை  எழுப்பினர். இதைத் தொடர்ந்து, ஸ்ரீதேவி  பூதேவி சமேதராய் சென்னகேசவ பெருமாள் கோயிலைச் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரையில்  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீதேவி,  பூதேவி சமேத ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி  திருக்கோயிலில் அதிகாலை 4 மணி அளவில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. 
இதையடுத்து காலை ஆறு மணி அளவில் நித்தியபடி பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயில் தர்மகர்த்தா மற்றும் நிர்வாகிகள் உள்பட பக்தர்கள்  கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.