அருகி வரும் பழைமையான கற்றாழைக் கயிறு திரிக்கும் தொழில்!

கிராமப்புறங்களை அதிகம் கொண்ட தருமபுரி மண்ணின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான கற்றாழைக் கயிறு திரிக்கும் தொழில், நவநாகரிக வளர்ச்சியால் மிகவே அருகிப் போயிருக்கிறது.
Updated on
2 min read

கிராமப்புறங்களை அதிகம் கொண்ட தருமபுரி மண்ணின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான கற்றாழைக் கயிறு திரிக்கும் தொழில், நவநாகரிக வளர்ச்சியால் மிகவே அருகிப் போயிருக்கிறது.
பேச்சுவழக்கில் கத்தாழை என்றழைக்கப்படும் கற்றாழையை வறண்ட பகுதிகளில் அதிகம் காண முடியும். மருத்துவக் குணங்கள் நிறைந்த கற்றாழை முற்றிக் காய்ந்த பிறகு, அதிலிருந்து நார் எடுத்து கயிறு திரிப்பது நம்முடைய பாரம்பரிய தொழில்.
இந்தக் கயிற்றிலிருந்து மாடுகளுக்கு கயிறு தயாரித்தலும், கயிற்றுக் கட்டில் போடுவதும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கமானதாக இருந்தது. நாளுக்கு நாள் நாகரிக வளர்ச்சி ஏற்பட்டதால், பிளாஸ்டிக் ஆதிக்கம் இந்த பாரம்பரிய வழக்கத்தை நம்மிடமிருந்து கடத்திவிட்டது.
அனைத்து பொருள்களிலும் பிளாஸ்டிக் வருகை தொடங்கி, கயிற்றுக் கட்டில் காணாமல் போய், பிளாஸ்டிக் வகையான நைலான் கொண்டு பின்னப்பட்ட நாடா கட்டில் பழக்கத்துக்கு வந்தது. மாட்டுக்கு நைலான் கயிறுகள் பயன்படுத்தப்படுகின்றன.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியிலிருந்து நாகதாசம்பட்டி செல்லும் வழியில் உள்ள பூச்செட்டிஅள்ளியில் கற்றாழை நார் எடுத்து கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் சின்னபாப்பா (45).
தனது கற்றாழை நார் எடுத்து கயிறு திரிக்கும் தொழில் குறித்து அவர் கூறியது:
ஒரு காலத்தில் தருமபுரி மாவட்டத்தின் பிரதான தொழில்களில் ஒன்று இது. நாங்களும் தலைமுறையாக இத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள். ஆனால், இப்போது கற்றாழை நாரில் இருந்து கயிறு திரிப்பதை மிக அரிதாகவே காண முடிகிறது. இதற்கு நன்கு வளர்ந்த- முற்றிய கற்றாழைகள் கிடைக்காததும், வேலைக்கேற்ற கூலி கிடைக்காததும் காரணம். கர்நாடகத்திலிருந்து முற்றி காயவைத்த கற்றாழைகளை கிலோ ரூ. 50-க்கு வாங்கி வருகிறோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெறும் ரூ. 8-க்கு வாங்கி வந்தது. இப்போது பெரும் விலையேற்றம். 
களங்களில் காய வைத்து, வாகனங்களை ஏற்றி அடித்துத் தயார்ப்படுத்த வேண்டும். அதன்பிறகு, சுமார் 40 கிலோ கற்றாழையை ஒரே நாளில் நார் எடுத்துவிட முடியும். அடுத்த ஒரே நாளில் கயிறாகத் திரித்துவிடவும் முடியும்.
200 கயிறுகளைக் கொண்ட ( 200 சுருண்டை) ஒரு பண்டல் ரூ. 2200-க்கு விற்பனை செய்கிறோம். முன்பெல்லாம் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதிகளையொட்டியே விற்பனையாகிவிடும். தேவையும் அதிகமாக இருக்கும். இப்போது அப்படியல்ல, மாநிலம் முழுக்க போகிறது என்கிறார் சின்னபாப்பா.
தற்போதுள்ள நைலான் கயிறு அளவுக்கு தரமாக இருக்குமா? எனக்கேட்டால், மழையில் நனையாமல் பாதுகாத்தால் சுமார் 40 ஆண்டுகளுக்கு அந்தக் கட்டிலைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

சூழல் காக்கும் கயிறு!
இதில் சூழலியல் காப்பு அம்சம் என்னவென்றால், கற்றாழை நாரில் இருந்து தயாரிக்கும் கயிற்றில், அழியும் கழிவுப் பொருளான கற்றாலையிலிருந்து நார் தயாரிக்கப்படுவதும், சில ஆண்டுகள் கழித்துஎவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் அந்தக் கயிறு அழிந்துபோவதும் இயற்கையான செயல்பாடு.
ஆனால், பிளாஸ்டிக், நைலான் கயிறு அப்படியல்ல. இதற்கான தயாரிப்பின்போது வெளியாகும் வேதிக் கழிவு உள்பட, காலம் முடிந்த பிறகு நிலத்தடியில் வீசியெறியும் கழிவு வரையிலும் சூழலுக்குக் கேடு விளைவிப்பதே. 
கற்றாழையில் இருந்து நார் எடுத்து கயிறு திரிக்கும் தொழிலை அரசு ஊக்குவிக்க வேண்டுமானால், கிராமப்புற மகளிர் குழுக்களுக்கு இதற்கான பயிற்சியை அளித்து, தேவையான அளவுக்கு கடனுதவியும் வழங்க வேண்டும். மேலும், தென்னை நாரில் இருந்து கயிறு திரிப்பதற்கு அளிக்கும் முக்கியத்துவம் அளித்தை போலவே, கற்றாழைக்கும் அரசு நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்தால் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com