தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் சாலையிலும், பாப்பாரப்பட்டி சாலையிலும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைக்கப்பட்ட சாலையோரப் பூங்காக்கள், முறையான பராமரிப்பின்றி எவ்வித மரங்களும் இன்றி, வெறுமனே பூங்காவுக்கான பலகைகளை மட்டும் கொண்டுள்ளன.
அசோகர் சாலையோரங்களில் மரங்களை நட்டார் என்பது நம்முடைய பள்ளிப் பாடத்தில் வரும் மிகப் பழமையான சொற்றொடர். கடந்த 20 ஆண்டுகளுக்குள் பெரும்பாலான சாலைகள் மரங்களின்றி மொட்டையான தார்த்தளங்களாக மாறிப் போய்விட்டன. வெயிலின் தாக்கம் அதிகமாக நமக்குப் படுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்பதை சுற்றுச்சூழலியலாளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும் வருகின்றனர்.
இத்தனைக்கும் மத்தியில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலையோரங்களில் மரம் வளர்ப்பதற்கான முயற்சிகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டே வருகின்றன என்பதையும் மறுக்க முடியாது. அந்த முயற்சிகளில் ஒன்றுதான், சாலையோரப் பூங்காக்கள்.
தருமபுரி மாவட்டத்தைப் பொருத்தவரை தேசிய நெடுஞ்சாலைகளல்லாத திருப்பத்தூர் சாலை, பென்னாகரம் சாலை, பாலக்கோடு சாலை, பாப்பாரப்பட்டி சாலை, அரூர் சாலை ஆகியவற்றில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே சாலையோரப் பூங்காக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
வெறுமனே மரம் வளர்ப்பு என்பதோடு நின்றுவிடாமல், நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
ஆனால், தற்போது தருமபுரியிலிருந்து பாப்பாரப்பட்டி செல்லும் சாலையில் இடதுபுறம் அமைக்கப்பட்ட சாலையோரப் பூங்கா- அதற்கான அடையாளமாக ஒரு துருப்பிடித்த பலகையைத் தவிர வேறெதுவும் இல்லாத வெற்றுத் தரையாகவே காட்சி தருகிறது. அதேபோல, தருமபுரியிலிருந்து பென்னாகரம் செல்லும் சாலையில் வலதுபுறம் அமைக்கப்பட்ட சாலையோரப் பூங்கா- நல்லவேளையாக துருப்பிடிக்காத பலகையைத் தவிர வேறெந்த அடையாளமும் இல்லாத வெற்றுத் தரையாகக் காட்சி தருகிறது.
அதே பென்னாகரம் சாலையில் மடத்துக்கு அப்பால் வலதுபுறம் அமைக்கப்பட்ட சாலையோரப் பூங்கா ஓரளவுக்கு அருகருகே நடப்பட்டு வளர்ந்த மரங்களைக் கொண்டு- ஆனால் பூங்காவுக்கான கூடுதல் தோற்றமில்லாமல் காணப்படுகிறது.
வெற்றுத் தரையாக காணப்படும் இடங்களில் இருந்த மரங்கள் பிடுக்கப்பட்டிருக்கலாம், அல்லது வறட்சிக் காலங்களில் பட்டுப் போயிருக்கலாம். இவற்றைத் தொடர்ந்து பராமரித்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் நோக்கம் முழுமையாக நிறைவேறியிருக்கும்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையின் தருமபுரி கோட்டப் பொறியாளர் நடராஜனிடம் கேட்டபோது அவர் கூறியது, "பூங்காக்களைப் பராமரிப்பதற்கென தனி நிதி துறையில் ஒதுக்கப்படவில்லை. மரங்கள் வேர்ப் பிடித்து வளராததற்கு பாறைகள் நிறைந்த மண் ஒரு காரணமாக இருக்கலாம். எனினும், அந்த இடங்களை நேரில் பார்வையிட்டு அவற்றை மீட்டெடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கிறேன்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.