நாகமரையிலிருந்து பண்ணவாடிக்கு 50 அடி தொலைவு பரிசல் பயணம்! ஓடையாக மாறிய மேட்டூர் காவிரி: அணைக்குள் எள், சோளம், கம்பு சாகுபடி

வறட்சியின் அடையாளமாக மேட்டூர் அணைக்கான தண்ணீர்வரத்து நொடிக்கு வெறும் 83 கன அடியாக  குறைந்துவிட்டதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம்
Updated on
1 min read

வறட்சியின் அடையாளமாக மேட்டூர் அணைக்கான தண்ணீர்வரத்து நொடிக்கு வெறும் 83 கன அடியாக  குறைந்துவிட்டதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம்,  நாகமரையிலிருந்து சேலம் மாவட்டம், பண்ணவாடிக்கு சுமார்  50 அடி அகலத்தில் ஓடைபோல ஓடும் காவிரியாற்றை பொதுமக்கள் பரிசல் மூலம் கடந்து வருகின்றனர்.
மேட்டூரில்  தண்ணீர் ஓரளவுக்கு நிற்கும் காலங்களில்,  மோட்டார் படகில் பண்ணவாடிக்கு செல்ல ஒரு மணி நேரம் பிடிக்கும்.  இப்போது ஒரு பரிசல் செல்ல அதிகபட்சமாக 5 நிமிடங்கள் போதுமானதாக இருக்கிறது. காவிரியாற்றின் பெரிய நீர்த்தேக்கமான மேட்டூர் அணையின் சுற்றளவு மட்டும் சுமார் 60 கி.மீ. தொலைவு கொண்டது.  பருவம் தப்பிய மழையால், மேட்டூரின் முழுக்கொள்ளளவு நிரம்பி பல ஆண்டுகளாகிவிட்டன.
தருமபுரி மாவட்டத்தின் எல்லையான நாகமரையிலிருந்து சேலம் மாவட்டம்,  பண்ணவாடிக்கு பொதுமக்கள் சென்று வருவதற்கு  இங்கு மோட்டர் படகுப் பயணம் உள்ளது.  ஓரளவு தண்ணீர் நிரம்பியிருக்கும் காலங்களில் இந்தப் பகுதியைக் கடக்க  சுமார் ஒரு மணி நேரமாகும். 
இந்த நிலையில்,  கடந்தாண்டை போலவே மார்ச் தொடக்கமே கடும் வெயில் காலமாகிவிட்டது. மார்ச் முதல் நாளே தருமபுரி மாவட்டத்தில் 95.9 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியது.  மார்ச் 17-ஆம் தேதி தவிர்த்து அனைத்து நாள்களும் 93 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெயிலே  பதிவாகியுள்ளது.
கர்நாடகத்திலிருந்து தண்ணீர் வரத்தும் வெகுவாகக் குறைந்துவிட்டது.  மார்ச் முதல் வாரத்தில் மேட்டூருக்கு வரும் தண்ணீர் வரத்து நொடிக்கு வெறும் 60 முதல் 80 கன அடியாக காணப்பட்டது.  வியாழக்கிழமை நிலவரப்படி தண்ணீர் வரத்து நொடிக்கு வெறும் 83 கன அடி மட்டுமே. இந்த நிலையில்,  மேட்டூர் அணை கட்டுவதற்கு முன் வரை அப் பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் தற்போது தருமபுரி மாவட்டத்தின் ஊட்டமலை,  நாகமரை உள்ளிட்ட கிராமங்களில் வசித்து வருகின்றனர்.  இவர்கள் மேட்டூர் அணையில் நீர் குறையக் குறைய தங்களது விவசாயப் பணிகளை அணைக்குள் மேற்கொண்டு வருகின்றனர்.  சட்டரீதியாக இதற்கு  எந்தத் தடையும் இல்லை. மேட்டூர் அணையின் நீர் இருப்பு வெகுவாக குறைந்துவிட்டதைத் தொடர்ந்து,  தற்போது அணைக்குள் எள், சோளம், கம்பு, நிலக்கடலை சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
தருமபுரி  மாவட்டம்,  நாகமரையிலிருந்து, சேலம் மாவட்டம், பண்ணவாடிக்கு செல்லும் வழக்கமான பகுதியில் காவிரி சுமார்  50 அடியில் ஓடை போல ஓடிக் கொண்டிருக்கிறது. அதிகபட்சம் 3 நிமிடங்களுக்குள்ளான பரிசல் பயணம்  நடைபெற்று வருகிறது. இரு பகுதியில் இருந்தும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களையும் பரிசலில் ஏற்றி மறு கரையில் இறங்கிக் கொள்கின்றனர்.  கரைப் பகுதியில் ஷேர் ஆட்டோ வசதியும் இருக்கிறது. தருமபுரி மாவட்டம்,  நெருப்பூர், ஏரியூர், நாகமரை பகுதியைச் சேர்ந்த கணிசமான மாணவ, மாணவியர்,  சேலம் மற்றும் ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களில் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com