ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

10 ஆண்டுகளில் சரிபாதிக்கும் கீழ் சரிந்த வெள்ளோலை வெற்றிலை சாகுபடி!

தருமபுரி மாவட்டத்தில் வெற்றிலை சாகுபடிக்குப் பெயர் போன வெள்ளோலை பகுதி, வறட்சி மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் கடந்த 10

Updated On :6 அக்டோபர் 2018, 9:40 pm


தருமபுரி மாவட்டத்தில் வெற்றிலை சாகுபடிக்குப் பெயர் போன வெள்ளோலை பகுதி, வறட்சி மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் கடந்த 10 ஆண்டுகளில் பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது.
வெள்ளோலை பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏறத்தாழ 50 ஏக்கரில் நடைபெற்ற வெற்றிலை சாகுபடி, இப்போது அதிகபட்சம் 20 ஏக்கரைத் தாண்டாது என்கிறார்கள் அப் பகுதி மக்கள்.
எல்லாவிதமான வீட்டு விசேஷங்களிலும் வெற்றிலை மிக முக்கியமான ஒன்று. விருந்துக்குப் பிறகு தாம்பூலம் தரித்தல் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களின் உணவின் மிக முக்கிய அம்சம். வெறுமனே பழக்கம் என்பதோடு மட்டுமல்ல, செரிமானக் கோளாறு, சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கும் வெற்றிலை அரிய நிவாரணி.
விவசாயம்தான் பிரதான தொழிலான தருமபுரி மாவட்டத்தில் வெள்ளோலை என்ற மலைச்சாரல் பகுதி வெற்றிலை சாகுபடிக்குப் பெயர்போனது.
நீளமாக வளர்ந்த முருங்கை, அகத்தி, தகரை ஆகிய மரங்களில் கொடியாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் வெற்றிலைச் செடித் தோட்டத்துக்கு, காற்றுக்குப் பயந்து சுற்றிலும் பாதுகாப்பான அடைப்புகள் இருக்கும். இதுதான் வெற்றிலைக் கொடிக்காலுக்கு அடையாளம். வெள்ளோலைப் பகுதிகளில் இந்தக் காட்சியைத் தாராளமாகப் பார்க்க முடியும்.
ஆண்டு முழுவதும் வருமானம் தரும் இச் சாகுபடியில், 21 நாட்களுக்கு ஒருமுறை வெற்றிலை கிள்ளுவார்கள். வெள்ளோலை வெற்றிலை மாதந்தோறும் பவானி அருகேயுள்ள காளிங்கராயன்பாளையம் சந்தைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
பிரதான கொடியில் வரும் முற்றிய இலைகள் மட்டை வெற்றிலை என்றும், கிளைக் கொடிகளில் இருந்து வரும் இலைகள் கைமாறு வெற்றிலை என்றும் அழைக்கப்படுகிறது. மட்டை வெற்றிலை வெளி மாநிலங்களுக்கு பீடா தயாரிப்புக்காகச் செல்கிறது.
ஒரு கட்டுக்கு 100 வெற்றிலை. 28 கட்டுகளைக் கொண்டது ஒரு சுமை. சுமையொன்றுக்கு ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை வெற்றிலைக்கு விலை கிடைக்கிறது. சராசரியாக ஒரு சுமை வெற்றிலை ரூ. 4 ஆயிரம்.
பரம்பரையாக வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டு வரும் ஜாலிகொட்டாயைச் சேர்ந்த என். நரசிம்மன் கூறியது:
ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் குடும்பம் வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளோலைப் பகுதியில் சுமர் 50 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி நடைபெற்று வந்தது. ஆனால், இப்போது 20 ஏக்கரைத் தாண்டினாலே பெரிய விஷயம்.
ஒரு சுமை வெற்றிலை விலை சராசரியாக ரூ. 4 ஆயிரம்தான் பல ஆண்டுகளாக. ஆனால், வேலையாள் கூலி பல மடங்கு உயர்ந்திருக்கிறது. போக்குவரத்துச் செலவும், நோய்த் தாக்குதல் மற்றும் பூச்சித் தொல்லையில் இருந்து பாதுகாக்கும் மருந்து, உரம் விலைகளும் பல மடங்கு உயர்ந்திருக்கின்றன.
தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட எந்தவொரு அரசுத் துறையில் இருந்தும் மானியமோ, பயிற்சியோ, நிவாரணமோ வெற்றிலை விவசாயிகளுக்குக் கிடையாது. அரசு எங்கள் பக்கமும் கவனத்தைத் திருப்பினால் வெள்ளோலை வெற்றிலை மீண்டும் செழித்துத் தழைக்கும் என்கிறார் நரசிம்மன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.