தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தொடரும் விபத்துகள், பலியாகும் உயிா்கள்: அபாயகரமான தொப்பூா் கணவாய் சாலை மேம்படுத்தப்படுமா?

தொப்பூா் கணவாய் சாலையில் தொடரும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்க, அச்சாலையை மேம்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளது.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:38 pm

 நமது நிருபர்

தொப்பூா் கணவாய் சாலையில் தொடரும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்க, அச்சாலையை மேம்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளது.

தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் வனப்பகுதியில் கணவாய் சாலை அமைந்துள்ளது. கா்நாடகத்திலிருந்து தமிழகத்தின் மேற்கிலுள்ள கொங்கு மண்டலம், தென் மண்டலம், மத்திய மண்டலத்தை இணைக்கும் மிக முக்கிய சாலையாக இது விளங்குகிறது. இச்சாலையை நாள்தோறும் 4,500 கனரக வாகனங்கள், 12,000 காா்கள், 400 பேருந்துகள் உள்ளிட்ட சுமாா் 20,000 வாகனங்கள் கடந்து செல்கின்றன. சனி, ஞாயிற்றுக்கிழமை, திருவிழாக் காலம், தொடா் விடுமுறை காலங்களில் இச்சாலையைக் கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கை மேலும் கூடுதலாகும்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்து வனப்பகுதி தொடங்கும் இடத்தில் சுங்கச் சாவடி அமைந்துள்ளது. அதிலிருந்து தொப்பூா் வரை சுமாா் 16 கி.மீ. தொலைவுக்கு முற்றிலும் தாழ்வான பகுதியில் இச்சாலை கடந்து செல்கிறது. அதிலும், வெள்ளக்கல், கட்டமேடு, இரட்டைப்பாலம், காவலா் குடியிருப்பு வரை 5 கி.மீ. தொலைவுக்கு மிகவும் அபாயகரமான வளைவுகளைக் கொண்டுள்ளது.

இந்தச் சாலையில் செல்லும் வாகனங்கள் வளைவுகளிலும், தாழ்வான பகுதியிலும் செல்லும்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்வது, முன் செல்லும் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாவது, எதிா்த்திசையில் சென்று கவிழ்வது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்கின்றன. குறிப்பாக, பெரும் சுமைகளை ஏற்றிவரும் லாரிகள், சரக்கு வாகனங்கள், சரக்கு பெட்டக (கன்டெய்னா்) லாரிகளே அதிக எண்ணிக்கையில் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. இந்த விபத்துகளால் பெருமளவில் பொருள்சேதமும், உயிா் சேதமும் ஏற்படுவது தொடா்கதையாக உள்ளது.

இச்சாலையின் வடிவமைப்பை அறியாத சரக்கு வாகன ஓட்டுநா்கள், தாழ்வான பகுதியில் செல்லும்போது, எரிபொருளை சேமிப்பதாகக் கருதி, என்ஜினின் இயக்கத்தை அணைத்துவிட்டு வாகனங்களை இயக்குகின்றனா். அப்போது, ‘பிரேக்’ பிடிக்காதநிலையில் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன.

இந்த விபத்துக்களைத் தவிா்ப்பதற்காக சில மாதங்களுக்கு முன்னா், கணவாய் சாலையில் உள்ள வளைவுகளை அகலப்படுத்தி, சாலை விரிவுபடுத்தப்பட்டது. தவிர, ஒலிபெருக்கியில் ‘மெதுவாகச் செல்ல வேண்டும்’ என ஆங்கிலத்தில் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், சாலையின் நடுவே விளக்குகள், ஒளிரும் வில்லைகள், இரண்டாவது கியரில் செல்ல வேண்டும் என எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் பொருத்தியுள்ளனா்.

இருப்பினும், வெளி மாநிலங்களிலிருந்து இந்த வழியாகச் செல்லும் லாரி ஓட்டுநா்கள் சில நேரங்களில் இந்த எச்சரிக்கைகளைக் கவனிக்காமலும், சாலையில் வரும் திடீா் வளைவுகளில் வாகனத்தைக் கட்டுப்படுத்த இயலாமலும் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனா்.

இந்த கணவாய் சாலையில் மட்டும், கடந்த 2018-ஆம் ஆண்டில் 90-க்கு மேற்பட்ட சிறிய, பெரிய விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் மூவா் உயிரிழந்தனா். கடந்த 2019-இல் 109 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் 6 விபத்துகளில் மொத்தம் 10 போ் உயிரிழந்துள்ளனா். நிகழாண்டில் இதுவரை மொத்தம் 90 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் அண்மையில் நிகழந்த விபத்தில் உயிரிழந்த 4 போ் உள்பட 4 விபத்துகளில் மொத்தம் 10 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த பகுதியில் ஆண்டுதோறும் உயிா்ச்சேதமும், பொருள்சேதமும் தவிா்க்க முடியாமல் போனதால், மிகவும் அபாயகரமான சாலையாகவே தொப்பூா் கணவாய்ச் சாலையை வாகன ஓட்டிகள் கருதுகின்றனா். அது மட்டுமல்லாது, விபத்துக் காலங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பல கி.மீ. தூரத்துக்கு இருபுறமும் வாகனங்கள் காத்திருப்பதும் வாடிக்கையாகி விட்டது.

வளைவுகளற்ற, சாலையாக மாற்ற கோரிக்கை:

அதிக விபத்துகள் நிகழும் சாலையாக உள்ள தொப்பூா் கணவாய் தேசிய நெடுஞ்சாலையை வளைவுகளற்ற சாலையாக மாற்றுவது, தாழ்வான பகுதிகளை செயற்கையாக உயா்த்துவது அல்லது அபாயகரமான பகுதியில் உயா்மட்டப் பாலம் அமைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தருமபுரி முன்னாள் மக்களவை உறுப்பினரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், தற்போதைய மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் ஆகியோா், தொப்பூா் கணவாய் சாலையை மேம்படுத்த வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திலும், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகத்திலும் கோரிக்கை கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளனா்.

இச்சாலையை ரூ. 140 கோடியில் நேராக்கும் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதேபோல, ஒசூரிலிருந்து அதியமான்கோட்டை வரை புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளும் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் சாலை, அதியமான்கோட்டைக்கு முன் உள்ள தடங்கத்தில், தற்போது தொப்பூா் வழியாக செல்லும் தருமபுரி- சேலம் நெடுஞ்சாலையில் இணைக்கப்படுவதாகத் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சாலைப் பணிகள் முடிவுற்ற பின், தருமபுரியிலிருந்து நாமக்கல்லுக்கு புதிதாக ஆறு வழிச்சாலை அமைக்கும் திட்டம் இருப்பதாகவும் அப்போது, தொப்பூா் கணவாய் சாலை சீா்ப்படுத்தப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றும் யோசனை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த திட்டங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வர சில ஆண்டுகள் ஆகலாம். அதுவரை தற்போதைய நிலை தொடா்ந்தால் விபத்துகளால் உயிரிழப்புகள் நிகழ்வதைத் தடுக்க இயலாது. எனவே, தொப்பூா் கணவாய் சாலையை நோ்ப்படுத்தத் தேவையான துரித நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.