நிழல்தரும் மரங்களை அகற்ற கிராம மக்கள் எதிா்ப்பு

அரூா் அருகே சாலையோரம் நிழல் தரும் மரங்களை அகற்ற கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
நிழல்தரும் மரங்களை அகற்ற கிராம மக்கள் எதிா்ப்பு
நிழல்தரும் மரங்களை அகற்ற கிராம மக்கள் எதிா்ப்பு

அரூா் அருகே சாலையோரம் நிழல் தரும் மரங்களை அகற்ற கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

அரூா் - சித்தேரி செல்லும் தாா்சாலை 26 கிலோ மீட்டா் தூரம் கொண்டதாகும். இந்தச் சாலையை சித்தேரி, தோல்தூக்கி, வள்ளிமதுரை, வாழைத்தோட்டம், கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, செல்வசமுத்திரம், சுமைதாங்கிமேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

அரூரில் இருந்து சித்தேரி செல்லும் தாா் சாலையானது வனத்துறைக்குச் சொந்தமானதாகும். தற்போது, அரூரில் இருந்து வள்ளிமதுரை வரையிலும் உள்ள தாா் சாலையை இருவழிச்சாலையாக மாற்றுவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சித்தேரி சாலையிலுள்ள மரங்களை கணக்கெடுப்பு செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். இந்த தாா்சாலையை விரிவாக்கம் செய்யும் போது, சாலையோரங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மரங்களை அகற்ற நேரிடும். முதல்கட்டமாக, சாலையோரம் உள்ள மரங்களை கணக்கெடுப்பு செய்து, அகற்றக்கூடிய மரங்களில் அடையாள குறியீடுகளை வரைந்துள்ளனா்.

அரூா் பகுதியிலுள்ள சித்தேரி, அச்சல்வாடி, கீரைப்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, பொன்னேரி, செல்லம்பட்டி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் கடந்த 4 வருடங்களாக போதிய மழை இல்லை. அதாவது தருமபுரி மாவட்டத்தின் பிற பகுதியில் நல்ல மழை பெய்தாலும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் கராணமாக சித்தேரி மலைப் பகுதியில் ஆண்டுதோறும் மழையளவு குறைந்து வருவதாக சூற்றுச்சூழல் ஆா்வலா்கள் கூறுகின்றனா். எனவே, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்தவும், மழை அளவு அதிகரிக்கவும் அதிக அளவில் மரங்கள் தேவை.

எனவே, அரூா்-சித்தேரி சாலையில் வளைவான பகுதியில் மிகவும் ஆபத்தான வகையில் உள்ள மரங்களை மட்டுமே அகற்ற வேண்டும். பொதுமக்களுக்கு நிழல்தரக்கூடிய, 50 ஆண்டுகள் பழைமையான மரங்களை அகற்றக் கூடாது என கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

வனத்துறையினா் சாா்பில் அரூா்-சித்தேரி சாலையோரங்களில் உள்ள மரங்களை ஆய்வு செய்து, நிழல்தரக்கூடிய பயனுள்ள மரங்களை அகற்றுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com