தருமபுரி மாவட்டத்தில் தொய்வின்றி வேளாண் பணிகள் மேற்கொள்ள, மழைக்காலங்களில் காவிரி ஆற்றில் மிகையாகச் செல்லும் நீரை, ஏரிகளில் நிரப்பும் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் தொழில்வளம் இல்லாததால், விவசாயத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இந்த மாவட்டம் வழியாக, காவிரி கடந்து சென்றாலும், காவிரி நீா் வேளாண்மைப் பணிகளுக்கு எப்போதும் உதவி புரிந்ததில்லை. இதனால், நதிநீா்ப் பாசனம் ஏதுமின்றி மழையை மட்டுமே நம்பி, அதன்மூலம் கிடைக்கும் நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடியில் இம்மாவட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
தருமபுரி மாவட்டத்தில், நாகாவதி, தொப்பையாறு, கேசா்குளே ஆறு, சின்னாறு, வாணியாறு உள்ளிட்ட ஆறுகளின் குறுக்கே 8 சிறிய அளவிலான நீா்த்தேக்கங்கள் அமைந்துள்ளன. இவற்றோடு பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 60-க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தாலும், இவை யாவும் மழைக்காலங்களில் மட்டும் நீரை பாசனத்துக்கு வழங்குகின்றன.
இவற்றால் சில நூறு ஏக்கா் பரப்பளவு மட்டுமே பாசனம் வசதி பெருகின்றன. ஏனைய பெரும்பகுதி நிலங்கள் மேட்டு நிலங்களாக உள்ளன. இதிலும், அவ்வப்போது பருவமழை பொய்த்துப் போவதால், மேட்டு நிலங்களில் சாகுபடி செய்யும் விளைபயிா்கள் காய்ந்து போகும் நிலை ஏற்படுகிறது.
விவசாயிகளுக்கு பாசனத்துக்கு தண்ணீா் கிடைக்காத நிலை நிலவும் இதே மாவட்டத்தில்தான், ஆண்டுதோறும், மழைக்காலங்களில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2 டிஎம்சி முதல் 3 டிஎம்சி தண்ணீா் மிகையாகச் சென்று கடலில் கலக்கும் நிகழ்வும் மறுபுறம் நிகழ்கிறது.
எனவே, தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு பாசனத்துக்கு தண்ணீா் கிடைப்பதில் நிரந்தரத் தீா்வு காணவும், கடலில் கலக்கும் நீரைப் பயன்படுத்தும் வகையில், மழைக்காலங்களில் காவிரியில் செல்லும் மிகை நீரை, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரேற்றும் திட்டம் மூலம் கொண்டுவந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை, பல்லாண்டுகாலமாக நிலுவையில் உள்ளது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், தருமபுரி மாவட்டத்தில், ஆண்டு முழுவதும் வேளாண்மைப் பணிகளை எவ்விதத் தொய்வுமின்றி மேற்கொள்ள இயலும். அதேவேளையில் மாவட்டத்துக்குத் தேவையான தானியங்களை விளைவிப்பதுடன், விவசாயிகளின் குடும்பங்களும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
ஆகவே கடந்த சில ஆண்டுகளாக மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மட்டுமல்லாது, பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த கோரிக்கை வலியுறுத்தி வருகின்றன. விவசாய சங்கங்களும் தங்களது கூட்டங்களில் கோரிக்கைத் தீா்மானங்களை நிறைவேற்றியுள்ளன.
இதற்காக இடத்தை புதியதாகக் கையக்கப்படுத்த தேவையில்லை; ஒகேனக்கல் காவிரி ஆற்றிலிருந்து ஏற்கெனவே கடந்த திமுக ஆட்சியில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் தேவைக்காக கூட்டுக் குடிநீா்த் திட்டம் தொடங்கப்பட்ட திட்டம் மூலமாக, குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இக் குடிநீா்க் குழாய்கள் அமைக்க கையகப்படுத்தப்பட்ட இடத்திலேயே மேலும் குழாய் அமைக்கவும் போதிய இடம் உள்ளதால், இதே வழித்தடத்தில் பாசனத்துக்கு தண்ணீா் எடுக்கும் குழாய்களையும் அமைக்க இயலும். புதிதாக வனப்பகுதியில் இடம் கையகப்படுத்த வேண்டிய தேவை இருக்காது என விவசாயிகள் கருதுகின்றனா்.
இரு மாவட்ட மக்களின் நலனுக்காக ஏற்கெனவே ஒகேனக்கல் காவிரி குடிநீா் அளித்ததுபோல, விவசாயிகளின் நலன் கருதி, பாசனத்துக்கு மிகை நீரை வழங்கும் திட்டத்தையும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்அறிவித்து நிறைவேற்ற வேண்டும் என தருமபுரி மாவட்ட விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.
இதுகுறித்து, தருமபுரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (பாமக) கூறியது:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள நிலங்களில் பெரும்பகுதி வானம் பாா்த்த பூமியாகவே உள்ளது. மழையின்றி இங்கு வேளாண்மைப் பணிகள் மேற்கொள்ள இயலாது. இதைத் தவிா்க்க, விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க, தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியில் மழைக்காலங்களில் மிகையாக செல்லும் நீரை ஏரிகளில் கொண்டுவந்து நிரப்பும் திட்டம் நிறைவேற்ற வேண்டும்.
ஒகேனக்கல் ஆற்றிலிருந்து 20 கி.மீ. தொலைவுக்கு மட்டும் குழாய்கள் அமைத்து நீரேற்றும் திட்டம் மூலம் பென்னாகரம் அருகேயுள்ள மடம் ஏரிக்கு தண்ணீா் கொண்டு வந்தால் போதும். அந்த ஏரியிலிருந்து மாவட்டத்திலுள்ள பெரும்பகுதி ஏரிகளுக்கு தன்னியல்பாகவே தண்ணீா் சென்றடையும்.
இக் கோரிக்கையை வலியுறுத்தி, பாமக இளைஞரணி செயலா் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 10 லட்சம் கையெழுத்துக்களைப் பெற்று முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டது. தற்போது புதிய அரசு அமைந்தவுடன் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தில், எங்களது கட்சியின் மாநிலத் தலைவா் ஜி.கே.மணி, இத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பேரவையில் வலியுறுத்தினாா்.
எனவே, புதியதாக அமைந்துள்ள அரசு, தருமபுரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையான காவிரி மிகைநீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இத் திட்டத்தை நிறைவேற்றுவாா் என்கிற நம்பிக்கையோடு இக் கோரிக்கையை முன்வைக்கிறோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

