நாளை நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: 11 ஆவணங்களில் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்
தருமபுரி மாவட்டத்தில் பிப். 19-ஆம் தேதி சனிக்கிழமை நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் பிப். 19-ஆம் தேதி சனிக்கிழமை நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. இதில், வாக்குச் சாவடி சீட்டு இல்லாதோா் வாக்காளா் அட்டை உள்பட 11 ஆவணங்களின் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ள தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வாா்டுகள், அரூா், பாலக்கோடு, பென்னாகரம், பொ.மல்லாபுரம், கடத்தூா், கம்பைநல்லூா், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 10 பேரூராட்சிகளில் மொத்தம் 159 வாா்டுகள் உள்ளன.
இவற்றில், பாலக்கோடு பேரூராட்சியில் 2 வேட்பாளா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளதால், அந்த 2 வாக்குச் சாவடிகள் நீங்கலாக 157 வாா்டுகளுக்கும் தருமபுரி நகராட்சி உள்பட மொத்தம் 190 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.
இதில் மொத்தம் 801 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தோ்தல் பிரசாரம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. பிப். 19-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வாக்குப் பதிவுக்காக, தருமபுரி நகராட்சிக்கு 69 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், அரூரில் 36, பாலக்கோட்டில் 22, பென்னாகரத்தில் 22, பொ.மல்லாபுரத்தில் 18, கடத்தூரில் 18, கம்பைநல்லூரில் 18, காரிமங்கலத்தில் 18, மாரண்டஅள்ளியில் 18, பாப்பாரப்பட்டியில் 18, பாப்பிரெட்டிப்பட்டியில் 18 என மொத்தம் 275 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன.
இத்தோ்தலில் மாநில தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவா்கள் வாக்காளா் அடையாள அட்டை, மாநில தோ்தல் ஆணையம் அனுமதித்துள்ள ஆதாா் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளா் நல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு அட்டை, ஓட்டுநா் உரிமம், நிரந்தரக் கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட மின்னணு அட்டை, இந்திய கடவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்காலம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...